Wednesday, January 25, 2006

அமானுஷ்ய வாசகி #5

இதற்கு முன்: http://pithatralgal.blogspot.com/2006/01/4.html

முக்கால் மணி நேரத்தில் பேருந்து தாம்பரத்தைத் தாண்டியிருந்தது. அமைதியாக ஏதொ ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்த என் நண்பனிடம் திரும்பினேன். என்னைக் கூர்மையாகப் பார்த்தவன்

"என்ன பார்க்கறே? நானே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு ஏன் இப்படி நடிக்கறேன்னு கேட்க வர்றே, அப்படித்தானே?"

எழுத்தாளனாக இருந்ததில் அடுத்தவரின் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை ஓரளவிற்காவது படிக்கத் தெரிந்திருக்கிறான் போலும்.

"ஆமாம்" என்பது போல் தலையசைத்தேன்.

"ஊருக்குப் போகலாம்னு சொன்னது நீ, போகனுமான்னு தயங்கினது நான்..ரெண்டு பேருமே திடீர்னுதான் முடிவு பண்ணினோம், இதிலேர்ந்தே தெரியலியா உனக்கு..? " என்றான்.

"அதுதானே.. அவன் சொல்வது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை. அப்படியிருக்க அவனே ரிசர்வ் செய்வானேன், என்னை வேறு அழைப்பானேன்.." என்று தோன்ரியத்தால் அப்படியே அமைத்யானேன்.

"ஸாரிடா.." என்றேன்.

"எதுக்கு இப்ப ஸாரி.. யாராக இருந்தாலும் அப்படித்தான் நினனப்பார்கள். விடு.ஆனா இதுல ஏதோ மர்மம் இருக்கு, அதைக் கண்டு பிடிப்போம் முதலில்" என்றான்.

"சரி, சரி." என்றேன் அமைதியாக.

"பய நல்லா தெளிவாத்தான் இருக்கான்" என்று உள்ளூர நினைத்துக் கொண்டேன்.

"டேய் நான் தெலிவாத்தான் இருக்கிறேன்." என்றான்.

"அது சரி" என்று தலையாட்டி வைத்தேன்.

பேருந்தை விட்டு இறங்கியதும் நேரே ஒரு விடுதிக்குச் சென்றோம்.

"சார், இவர் பேருக்கு எதுனா ரூம் புக் ஆகியிருக்கா....? " என்று கேட்டுவிட்டு பெயர், ஊர் எல்லாம் சொன்னேன்.

"அப்படி ஏதும் புக் ஆகவில்லை.." என்றனர்.

"கஷ்டம்.." என்று தலையிலடித்துக் கொண்டான் என் நண்பன்.

"சரி, ஒரு டபுள் ரூம் குடுங்க.."

சாவியைப் பெற்றுக் கொண்டு இரண்டாவது மாடியில் இருக்கும் எங்கல் அறையய நோக்கி நடந்தோம்.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/02/6.html

அமானுஷ்ய வாசகி #4

இதற்கு முன்: http://pithatralgal.blogspot.com/2006/01/3.html

"சரி நீ போய் சீட்ல உக்காரு. நான் வாட்டர் பாட்டில் வாங்கி வர்றேன் " என்ற என் நண்பனிடம்
"சீக்கிரம் வந்துடு.." என்று கூறி அனுப்பி விட்டு என் இருக்கையில் சென்று அமர்ந்தேன்.

இனி கதையை என் நண்பன் தொடர்கிறான்....
"என்ன இது, இவனே ரிசர்வ் பண்ணிட்டு விளையாடுறானா? என்று சிந்தித்தவாறே நடத்துனரை நைசாக ஒரம் கட்டினேன்.
"சார், இவர்தான் அன்னிக்கி ரிசர்வ் பண்ண வந்தாருன்னு எப்படி இவ்வளவு க்ரெக்டா சொல்றீங்க?"
"இன்னும் உங்க குழப்பம் தீரலியா?.. அன்னிக்கு புக்கிங் கவுண்டர் பக்கத்துலதான் நானும் இருந்தேன்.
இவரு முதல்ல ஒரு டிக்கெட்தான் புக் பண்ணினாரு, அப்பக் க்ஊட அவர் முகத்தை சரியா பார்க்கலை நான்..போயிட்டு கொஞ்ச நேரத்துலயே வேக வேகமா திரும்பி வந்த அவர் என் மேலதான் இடிச்சிகிட்டார். அவர்ஹ் திரும்பி போகும்போது பின்னாடி நின்னிருந்த ரெண்டு பேரு அவரு ஏதோ ஒரு எழுத்தாளர் மாதிரி இருக்கறதா பெசிக்கிட்டாங்களே..'
"சரி, அந்த ரிசர்வேஷன் ஸ்லிப்புல எழுதியிருப்பாரில்லையா, அது எனக்கு கிடைக்குமா..?"
"என்னா சார், பஸ் கிளம்பற நேரத்துல இதெல்லாம் முடியுங்களா?"
"சரி இப்ப வேண்டாம். 2 நாள் கழிச்சி வர்றேன். அப்ப கிடைக்குமா?"
"நீங்க வேற, பழைய குப்பையெல்லாம் தேடனுமே..கிளார்க் சத்தம் போடுவார் சார்.."
"அவ்வளவுதானே.. அவரை நான் கவனிச்சிக்கறேன்..இப்ப இதை வச்சிக்கங்க..அந்த ஸ்லிப்பை மட்டும் எடுத்து வைங்க.. நான் வந்து வாங்கிக்கறேன்"
ஒரு ஐம்பது ரூபாய்த்தாளை அவர் கையில் தினித்தேன்.
"என்ன சார், ஏதாவது பிரச்னையா..? "என்று கேட்டவாறே வாங்கி தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்.
"சரி சரி.. டைம் ஆச்சு..சீட்டுக்குப் போங்க.."
பஸ் புறப்பட்டது.
இதற்குப் பின்: http://pithatralgal.blogspot.com/2006/01/5.html

Tuesday, January 24, 2006

அமானுஷ்ய வாசகி #3

இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/01/2.html

ஏனோ அன்று இரவு முழுவதும் உறக்கம் வராது சிந்தனைகளுடனே புரண்டு கொண்டிருந்தேன். அதிகாலைக்கு மேல்தான் என்னையுமறியாமல் கண்ணயர்ந்தேன். அதற்குள் என் திருமதியின் கைவண்ணத்தால் என் உறவினர்களின் எனக்கு ஏதோ உடல் நிலை சரியில்லாததைப் போல விசாரிக்க வந்திருந்தனர். அவர்களிடம் பேசி அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. மாமனார் வேறு விடவில்லை.

"மாப்பிள்ளை, ஏதாவது கோயிலுக்கு போய்ட்டு வரலாமா? ஒரு தடவை மந்திரிச்சிகிட்டா எல்லாம் சரியாப் போய்டும், மாப்பிள்ளை ஏதோ பயந்திருப்பார் போல"

"அதெல்லாம் ஒன்னுமில்லை மாமா, நீங்க கிளம்புங்க.." என்றேன்.

"என்னடா, ரெடியாகலியா நீ இன்னும்?" என்றவாறு வந்தான் என் நண்பன்.

"ஏண்டா அந்த ஊருக்கு திரும்ப போய்த்தான் ஆகணுமா என்ன?"

"போனாதான யாரு எப்ப எழுதினாங்கன்னு தெரிய வரும், ஆமா நீ என்ன பயப்படுறியா? அட்ரஸ மட்டும் குடு, நான் போய்ப்பார்க்குறேன்." என்று என் தைரியத்திற்கு வேறு சோதனை வைத்தான்.

"ச்சே, ச்சே எனக்கென்ன பயம், வேலைய விட்டுட்டு இதுக்காக அலையணுமான்னு யோசிச்சேன்"
என்று சமாளித்தவாறே புறப்பட ஆயத்தமானேன்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நானும் அவனும் நுழைந்தோம். பேருந்திற்கு அருகில் செல்லும்போதே நடத்துனர் அழைத்தார்.
"20, 21 தான உங்க சீட் நெம்பர், இன்னும் 10 நிமிஷம் கழிச்சி வந்திருந்தா அடுத்த பஸ்தான் பிடிக்கணும் நீங்க.."

"இல்லை சார், நீங்க நினைக்கற ஆள் நான் இல்லை, நான் எதுவும் ரிசர்வ் பண்ணவும் இல்லை"

"அட என்ன சார் நீங்க, போன வாரம்தான நீங்க வந்து ஒரு டிக்கெட் கேட்டீங்க, திரும்பி வந்து இன்னொரு டிக்கெட் வேணும்னு சொன்னீங்க, வேணும்னா லிஸ்ட்ல பாருங்க உங்க பேரு இருக்கான்னு"

லிஸ்டை சரி பார்த்த என் நண்பன் "என்னடா உன் பேரு தெளிவா அதுல இருக்கு, நீயே ரிசர்வ் பண்ணிட்டு மறந்துட்டியா?" என்றான். அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

"நல்ல ஆளுங்க சார் நீங்க! சரி சரி ஏறி சீட்ல உக்காருங்க, டிக்கெட் உள்ளே வந்து தர்றேன்"
என்றவாறு நகர்ந்தார்.

இதற்குப் பின்: http://pithatralgal.blogspot.com/2006/01/4.html

அமானுஷ்ய வாசகி #2

இதற்கு முன் : http://pithatralgal.blogspot.com/2006/01/1.html

நாக்கு உலர்ந்து போய் மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள நெற்றியில் ஆறாய் ஓடும் வியிர்வையினூடே நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தேன். என் மனைவி என்னவோ, ஏதோ என்று பயந்து விட்டாள். உடனடியாக ஓடிச்சென்று சாமி படத்திற்கருகிலிருந்த விபூதியைக் கொஞ்சம் எடுத்து வந்து என் நெற்றியில் பூசி விட்டாள். சிறிது நேரம் கழித்துத்தான் எனக்கு சுய உணர்வே திரும்பியது.
உடனே என் நண்பனை செல்பேசியில் அழைத்தேன்.

"டேய், கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா?, முக்கியமான விஷயம்"
"இந்நேரத்திலா, மணி இப்போ நைட் 10.30 ஆகுது, என்ன விஷயம் சொல்லு, ஏதாவது பிரச்னையா?"
"உடனே கிளம்பி வாயேன், நேர்லயே சொல்றேன்"
"சரி இன்னும் அரை மணியில அங்க இருப்பேன்"
தொடர்பை துண்டித்தான்.

காலி தேனீர் கோப்பையை டீபாயின் மீது வைத்தவாறே என்னை ஏறிட்டான்.
"அந்த கடைசியா வந்த கடிதங்கள் அந்த பெண்தான் எழுதியிருக்க வேண்டுமா என்ன? வேறு யாராவதோ கூட எழுதியிருக்கலாம் அல்லவா?"

"அப்படியே பார்த்தாலும் கூட இன்னிக்கு வந்த கடிதத்தை வேறு யாரும் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை, ஏன்னா இன்னும் அந்த நாவலை பிரசுரத்துக்கே நான் இன்னும் கொடுக்கலை"

"நீ இபோ எழுதிகிட்டிருந்த இந்த நாவலை பத்தி யார்கிட்டயாவது பேசியிருக்கியா? வெறும் தலைப்பே மட்டுமே வெச்சி விளையாட்டுக்காக இப்படி பண்ணலாமே?"

"இல்லியே, அந்த நாவலில் வற்ற கேரக்டர்களை பத்தி கூட தெளிவா விமர்சனம் பண்ணப்பட்டிருக்கு அந்த கடிததுல"

"அப்படியா....." என்றவாறே அழ்ந்த யோசனியில் இறங்கினான் என் நண்பன்.

இதற்குப் பின் : http://pithatralgal.blogspot.com/2006/01/3.html

Monday, January 23, 2006

அமானுஷ்ய வாசகி #1

வாராந்திரப் பத்திரிக்கையொன்றின் தொடர்கதைக்கு நாலாவது அத்தியாயத்தை முடித்து நிமிர்ந்தபோது மணி இரவு 12.30 ஐத் தாண்டியிருந்தது. இருப்பினும் தூக்கம் வரவில்லை. படுக்கையறையில் சிணுங்கிய என் இரண்டு வயது மகனை தூக்கக் கலக்கத்துடனேயே தட்டி விட்டுக் கொண்டிருந்தாள் என் மனைவி.

மேசை மீதிருந்த வாசகர் கடிதங்களை எடுத்து பதில் எழுத ஆரம்பித்தேன். கடிதங்களுக்கு மத்தியில் ஓர் கல்யாணப் பத்திரிகையும் இருந்தது. பிரித்துப் பார்த்தேன். என் நண்பன் ஒருவனின் தங்கைக்கு திருமணம். நடைபெறும் ஊரின் பெயர் சற்று பரிச்சயமானதாக இருந்தது. சற்று யோசித்துப் பார்த்ததில் அதே ஊரில் இருந்து எனக்கு தொடர்ந்து ஒரு வாசகியின் கடிதங்கள் வருவது எனக்கு நினைவுக்கு வந்தது. சரி இந்த திருமணத்திற்கு சென்று விட்டு அப்படியே அந்த வாசகியையும் சந்தித்து வரலாம் என்று முடிவு செய்தேன். இதன் மூலம் அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். எந்த ஊருக்குச்சென்றாலும் அந்த ஊர் வாசகர்களை வலிய சென்று சந்திப்பது என் வழக்கம்.


முகூர்த்தம் முடிந்த கையோடு சிற்றுண்டி முடிந்தவுடன் நண்பனிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். அந்த வாசகியின் முகவரியை கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை. தெரு முனையில் அந்த பெண்ணின் பெயரை சொல்லி விசாரித்தபோது ஏற இரங்க பார்த்தது ஏன் என்று மட்டும் புரியவில்லை. அந்த பெண்ணின் கணவர்தான் என்னை வரவேற்றார். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவர் முகம் சற்று கவலையடைந்ததையும் கவனித்தேன்.
"உங்க கதைகள்னா அவளுக்கு ரொம்ப உசிரு சார், உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவா, ஆனா பாருங்க நீங்க வந்த நேரம், அவ இப்ப உசிரோடயே இல்லை"
அதிர்ச்சியில் சற்று நேரம் அமைதியாய் இருந்தேன்.
"குழந்தைங்க.."
"இல்லை சார், போன வருஷம்தான் பிரசவம் சிக்கலாகி அம்மா குழந்தை ரெண்டு பேருமே...."
அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. தன் மனைவி எழுதும் வாசகர் கடிதங்களின் பிரதிகளையெல்லாம் எடுத்து வந்து காண்பித்தார். அதே அழகழகான கையெழுத்து. நெஞ்சு கனத்தது எனக்கு. சற்று நேர மௌனத்திற்குப் பின் ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டேன். தெரு முனை வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்த பின்னும் கூட நெஞ்சு கனமாகவே இருந்தது. என் மனைவி கேட்டாள். "என்னங்க உடம்பு ஏதும் சரியில்லையா? ". "ஒன்றுமில்லை" என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறினேன்.

ஏதொ ஒன்று மட்டும் என் உள்ளத்திற்குள் நெருடியது. கடைசியாக வந்த கடிதங்களின் பிரதி அவள் கணவனிடம் இல்லாததன் காரணம் என்ன? என்னுடைய ஃபைலை எடுத்து புரட்டினேன்.
நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பு அதிகமாகித்தான்போனது. கடிதங்கள் எழுதப்பட்ட தேதிகளைப் பார்த்தால், அவள் இறந்த தேதிக்குப் பிறகு எழுதப்பட்டவைகள்..................


"என்னங்க, உங்க ஃபேவரைட் ரசிகைகிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு, மேசை மேல வச்சிருந்தேன் பார்க்கலியா?" என்றால் என் மனைவி. பிரித்திப் பார்த்தேன். அடுத்த வாரம் பிரசுரத்திற்கு அனுப்ப இரண்டு தினங்களுக்கு முன்பே எழுதி முடித்த என் "நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்" என்ற நாவலை படித்ததாகவும், வெகுவாகப் பாரட்டியும் எழுதியிருந்தாள் அந்த அமானுஷ்ய வாசகி.

இதற்குப் பின் ;http://pithatralgal.blogspot.com/2006/01/2.html