Tuesday, September 11, 2007

மாதங்களில் அவள் மார்கழி - 7

பகுதி 6


"என்னவனுக்கு,
உனக்கெனப் பிறந்தவள் எழுதிக் கொள்வது. இங்கு நான் நலம், நீ நலமாய் இருக்கிறாய் என்று அறியப் பெற்றதால்.
இக்கடிதம் உன் கைக்கு வந்து சேரும் நேரத்தில் பல பேர் உன்னை வாழ்த்தி முடித்திருக்கலாம். ஆனாலும் என் கடிதத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருப்பாய் என்பது தெரியும்.
உன் பிறந்த நாள் அன்று உன்னோடிருக்க முடியவில்லை என்று வருத்தம்தான். ஆனால் என்னடா செய்வது. இது காலத்தின் கட்டாயம் ஆயிற்றே!
இரண்டாண்டுகளுக்கு முன்னால் இதே நாள் நினைவிருக்கிறதா உனக்கு?அன்றுதானே இனிப்பைத் தந்து விட்டு இதயத்தில் இடம் கேட்டாய்!
புதுச் சட்டை அணிந்து வந்து புயலை என்னுள் விட்டுச் சென்றாய்! அதைத்தானே நெஞ்சுக்குள் பொத்தி வைத்து வாழ்ந்து வருகிறேன்.
நீ அருகில் இல்லாத நாட்களைக் கடத்த அந்த நினைவுகள்தானே என்னை இயங்க வைக்கின்றன.
பரிசாய் என்ன அனுப்பலாம் என்று யோசித்தேன்! ஒன்றும் புலப்படவில்லை எனக்கு! என்னையே தந்த பின்னர் வேறென்ன தருவது உனக்கு!
இருந்தாலும் என் நினைவுகளை உன்னோட இறுத்திவைக்க இத்தோடு இரண்டு முத்தங்கள். நீ இந்த வரிகளை வாசிக்கும்போது நான் கண்களை மூடிக் கொண்டிருப்பேன்! வெட்கமாக இருக்கும் அல்லவா எனக்கு?
இவை உனக்கான மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல! எனக்கான உயிர்த்தலுக்கும்தான்!
இப்படிக்கு,
என்றென்றும் உனக்காக,
உன்னவள்!
மீண்டும் மீண்டும் படித்து முடித்தேன். எத்தனை முறையென்று தெரியவில்லை.
படிப்பதும் நெஞ்சின் மீது கவிழ்த்துக் கொள்வதுமாய்......
வாழ்த்திய நண்பர்கள் யார் யாரென்று நினைவில் இல்லை.
எந்தெந்த பாடப் பிரிவுகள் வந்து சென்றன என்றும் புரியவில்லை.
நானும் வகுப்பில்தான் இருந்தேன். உடலால் மட்டும்!
உள்ளத்தில் அவளோடு கைகோர்த்து கடற்கரை மணலில் அவளோடு கால் புதைய நடந்து கொண்டிருந்தேன்.
"ஹேப்பி பர்த் டே டூ யூ சக்தி..."
புன்னகைத்தேன்.
அழகான குரலில் எனக்கே எனக்கான தேவதை வாழ்த்துகிறாள்.
"ஹேப்பி பர்த் டே டூ யூ சக்தி..."
மீண்டுமா. சிரித்தேன்.
"சக்தி.. ஆர் யூ ஆல்ரைட்" - பிடித்து உலுக்கினாள்.
திடுக்கிட்டு விழித்தேன்.
வகுப்பில் யாருமில்லை. நான் மட்டும் தனியே இருந்தேன்.
எதிரில் கையில் பூங்கொத்தும், உதட்டில் புன்னகையுமாய் நந்தினி நின்றிருந்தாள்.
"ஓ! ஸாரி.. கவனிக்கலை.." என்றேன்.
"இட்ஸ் ஆல் ரைட்.. இன்னிக்கு உங்க பர்த் டேவாம், அதான் விஷ் பண்ணிட்டுப் போலாம்னு நானும் வெயிட் பண்ணினேன். திஸ் ஈஸ் ஃபார் யூ"
என்று பூங்கொத்தை நீட்டினாள்.
-----------------------------------------------------------------------------------------காலத்தின் குரல்
நிகழ் காலம் : "மச்சி! ஆப்பு எத்தனை அலங்காரமா ரெடியாகுது பாத்தியா?"
இறந்த காலம்: "ஆமாம்டா! பாவம் இந்த பயபுள்ளை!"
எதிர் காலம் : "ஏண்டா இப்படி அவசரப் படுறீங்க? பொறுத்திருந்துதான் பார்ப்போமே! என்னதான் நடக்கப் போகுதுன்னு!"