Wednesday, September 24, 2008

மாதங்களில் அவள் மார்கழி - 15

பகுதி 14

"அண்ணே! என்னை மன்னிச்சிடுங்கண்ணே!"
தயங்கி தயங்கி தென்னரசுவின் அருகில் சென்றாள் நந்தினி!

கலைந்த கேசமும், வாரக் கணக்கில் சவரம் செய்யப்படாத தாடையுமாய் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த தென்னரசு திரும்பிப் பார்த்தான்.

அருகில் தனது தங்கை நந்தினி கலங்கிய கண்களுடன் நிற்பதைப் பார்த்து பதறி எழுந்தான்.

"நந்தினி! வந்துட்டியாடா! என்னை விட்டுட்டுப் போயிட்டியோன்னு துடிச்சிப் போயிட்டேன் தெரியுமா?"

"அண்ணே! உங்களைச் சரியாப் புரிஞ்சிக்காம சண்டை போட்டுட்டேன்! என்னை மன்னிச்சிடுங்கண்ணே!" அவள் விழிகளில் தாரை தாரையார் கண்ணீர் வழிந்தோடியது!

"அட! என்னம்மா இது! இப்பத்தான் என்னைப் புரிஞ்சிகிட்டியில்ல அதுவே போதுண்டா! மன்னிப்பெல்லாம் எதுக்கு!"

உள்ளேயிருந்த தனது மனைவியை அழைத்தான்.

"மஞ்சுளா! நந்தினி வந்துட்டா பாரு! முதல்ல அவளுக்கு காஃபியும் அப்புறம் சாப்பிட டிஃபனும் கொடு! சரியா சாப்பிட்டாளோ என்னவோ"

சிலநாட்களாக அன்றாட அரசியல் வாழ்க்கையை விட்டு சோகமே கதியென்று இருந்த தென்னரசுவிற்கு பழைய தெம்பும் குதூகலமும் திரும்பிவிட்டிருந்தது!

சக்தியை அடிக்க தனது ஆட்களையே ஏவியது என்றும் ஒரே வாரத்தில் அலைந்து திரிந்து கண்டு பிடித்து தனது தங்கையின் முன்னர் கொண்டு வந்து நிறுத்தினார்.

"இதோ இவந்தான்ம்மா எல்லாத்துக்கும் காரணம்! போன உள்ளாட்சித் தேர்தல்ல இவனுக்கு சீட் கொடுக்கலைன்னு வன்மம் வெச்சிருந்து நேரம் பார்த்து விளையாண்டிருக்கான்! ராஸ்கல்"

அண்ணன் தங்கைக்கு இடையில் முன்பு இருந்ததை விட இப்போது பாசம் அதிகரித்திருந்தது! சிறிய இடைவெளி இருவருக்குள்ளும் நிறைய புரிதல்களை
ஏற்படுத்தி விட்டிருந்தது!

நந்தினியும் தனது பின்னணி நிஜங்களை ஓரளவு அறிந்துகொண்டிருந்தாள்! அன்று சக்தி மட்டும் நிஜங்களைச் சொல்லாமல் இருந்திருந்தால் தான் எவ்வளவு நன்றி கெட்டவளாகி விட்டிருக்கக் கூடும் என்று தனக்குத்தானே வெட்கப் பட்டாள்!

இந்த வசதியான வாழ்க்கை, சொகுசு பங்களா, கார்.. இப்படி யாவுமே தனக்கு உரிமையானதல்ல எனினும் தன் அண்ணன் தென்னரசு அப்படி ஒரு எண்ணமே வராமல் தன்னை வளர்த்து வந்த விதம் பற்றியும் எண்ணி எண்ணிக் குமைந்துகொண்டிருந்தாள்!

தென்னரசுவின் பாதங்களில் விழுந்து கண்ணீரால் கழுவ அவள் துடித்தாளும் இவளுக்கும் விஷயம் தெரிந்துவிட்டதென்று தெரிந்தால் தென்னரசு வருத்தமடையக் கூடும் என்றும் சக்தி சொல்லியிருந்த படியாள் தனக்குத் தெரிந்தவாறு காட்டிக் கொள்ளவில்லை!

5 வயதில் திருவிழாப் பண்டிகையில் பெற்றோரைத் தொலைத்துவிட்ட இவளை தென்னரசுவின் பெற்றோர்தான் எடுத்து வந்து வளர்த்தன்ர். அப்போது தென்னரசுவிற்கு 13 வயது! அழுதபடி நின்றிருந்த நந்தினியை தென்னரசுதான் அவனது தந்தைக்கு சுட்டிக் காட்டினான்.

அப்போது முதல் தனது தங்கை தனது தங்கை என்று பாசத்தைக் கொட்டிவந்தான்! அவனது திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே அவனது பெற்றோர்களும் கார் விபத்தில் பலியாகிவிட நாந்தினிக்கு தென்னரசுவே எல்லாமுமாகிப் போனான்.

நந்தினிகு ஒரு திருமணத்தை முடித்து வைத்த பின்னரே தான் குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதைத் தனது மனைவி மஞ்சுளாவிடமும் கூறி புரியவைத்து சம்மதிக்க வைத்திருந்தான்!

"மஞ்சுளா! நந்தினிக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வெச்சிடணும்னு நினைக்கிறேன்! நீ என்ன சொல்றே"

"பண்ணிடலாம்ங்க! சீக்கிரமே உங்களுக்குத் தெரிஞ்ச வகையில சொல்லி வைங்க! ஏதாவது மினிஸ்டரோட பையனுக்கே கூட பொண்ணு கேட்டு வருவாங்க"

"மினிஸ்டரெல்லாம் எதுக்குடி! நந்தினியே ஒரு பையனை மனசுக்குள்ளே முடிவு பண்ணி வெச்சிருக்கா! அப்புறம் பிரைம் மினிஸ்டரே வந்தாலும் நான் சம்மதிக்க மாட்டேன்! அவ சந்தோஷம்தான் என் சந்தோஷம்னு உனக்குத் தெரியும்ல!"

அதற்கு மேல் மஞ்சுளா ஒன்றும் பேசாமல் அமைதியாகி விட்டாள்!

-- தொடரும்...

Tuesday, March 11, 2008

மாதங்களில் அவள் மார்கழி! - 14

பகுதி 13

தனது செல்ஃபோன் ஒலிக்க படுக்கையிலிருந்து எழுந்து தனது செல்போனை எடுத்தான் சக்தி! நந்தினியின் எண்ணிலிருந்து அழைப்பு!

"சக்தி! நான் நந்தினி பேசுறேன்! எப்படி இருக்கீங்க?"

"ஹாய் நந்தினி! இப்ப பரவாயில்லை! ஆல் ரைட் நவ்! ஆனா வீட்டுல அம்மா அப்பால்லாம் பண்ணுற ஆர்ப்பாட்டத்துல டோட்டலா பெட் ரெஸ்ட்தான்! ரொம்ப போர் நந்தினி"

"அட! எதையும் விளையாட்டா எடுத்துக்காதீங்க சக்தி! நல்லா ரெஸ்ட் எடுங்க! இன்னொரு விஷயம் சக்தி! உங்களை ஆள் வெச்சி அடிச்சது யாருன்னு தெரிஞ்சி போச்சு!"

"அப்படியா! ஒரு நிமிஷம் நந்தினி! நான் மொட்டி மாடிக்கு வந்துடறேன்! இங்கே அம்மா காதுல விழுந்தா பிரச்சினை ஆயிடும்! யாரு எதுக்கு அடிச்சாங்கன்னு திரும்பவும் விசாரிக்க ஆரம்பிச்சிடுவாங்க!"

"ஓகே சக்தி!"

"ம் இப்ப சொல்லு நந்தினி! எதுக்காக அடிச்சாங்கன்னு எதாச்சும் தெரிஞ்சிதா? போலீஸ்ல பிடிச்சிட்டாங்களா! உங்க அண்ணன்தான் ஆர்வமா அவனுங்களை தேடிகிட்டிருந்தார் கைல சிக்கினாங்கன்னா உன் அண்ணனே பின்னிடுவார் போல"

"சக்தி! உங்களை ஆள் வெச்சி அடிச்சதே அவர்தான்! அடிச்சவங்களைக் கண்டு பிடிக்கிறேன்னு உங்ககிட்டே பாவனை வேற!"

"நந்தினி என்ன சொல்றே நீ? உங்க அண்ணனா?"

"ஆமா சக்தி! அட்ச்சிட்டு அவங்களாவே போலீஸ்ல போயி சரண்டர் ஆயிட்டாங்க! என் அண்ணன் போயி அவங்களை ஜாமீன்ல எடுத்ததை நானே என் கண்ணால பார்த்தேன்! பிறகு ரொம்ப கோபமா சண்டை போட்டுகிட்டு வீட்டை விட்டே வந்துட்டேன்! என்னமா நடிக்குறாரு தெரியுமா? அன்னிக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவராலே பதிலே சொல்ல முடியலை"

"கொஞ்சம் அவசரப் பட்டுட்டியே நந்தினி! எனக்கென்னவோ அவரா இருக்காதுன்னுதான் தோணுது! உன் அண்ணன் ஜாமீன்ல எடுக்குறதைப் பார்த்தா சொன்னியே! நீயே போய் பார்த்தியா? இல்லை வேற யாராச்சும் சொல்லி போயி பார்த்தியா?"

"என்ன சொல்றீங்க சக்தி! எனக்கு குழப்பமா இருக்கே! அன்னிக்கு வந்த அனானிமஸ் காலை வெச்சித்தான் நான் அன்னிக்கு எலிஃபெண்ட் கேட் போலீஸ் ஸ்டேஷன் போயி பார்த்தேன்! ஆனா அவரேதான் ஜாமீன்ல எடுத்திருக்கார், அவங்களுக்கும் அண்ணன் அனுப்பினத்தான் ஸ்டேஷன்லே சொல்லி இருக்காங்க!"

"அங்கதான் நந்தினி ஏதோ ஒரு மர்மம் இருக்கு! அவரே ஆட்களை அனுப்பியிருந்தா அவரே போயி ஜாமீன்ல எடுத்திருக்க மாட்டார். அதுக்கு அவசியமும் இல்லை! ஜாமீன்ல எடுக்க அவர் நேர்ல போயித்தான் ஆகணுமா என்ன? அப்புறம் இன்னொரு விஷயம் நந்தினி அதன்பிறகு அந்த ஸ்டேஷன்லே போயி விசாரிச்சி பார்த்தியா அவங்க மேல எஃப்.ஐ.ஆர் என்னன்னு போட்டிருக்காங்கன்னு ஏதாச்சும் தெரியுமா?"

"இல்லை சக்தி! அவர் ஸ்டேஷன்லேர்ந்து கெளம்பின பிறகு நான் திரும்ப ஹாஸ்பிடல் வந்துட்டேன்! அன்னிக்கும் அடுத்த நாளும் அங்கயே இருந்து நீங்க டிஸ்சார்ஜ் ஆகி ஊருக்குக் கிளம்பினதும்தான் வீட்டுக்குப் போயி துவம்சம் பண்ணிட்டேன்"

"தப்பு பண்ணிட்டே நந்தினி! இன்னும் கொஞ்சம் நிதானமா விசாரிச்சிப் பார்த்திருக்கணும்! உன் அண்ணன் என்னை அடிக்கனும்ங்குறதுக்கு காரணமே கிடையாது! மேலும் உன் அண்ணனைப் பத்தி எனக்கும் கொஞ்சம் தெரியும்! காலேஜ்ல பசங்க சொல்லி கேட்டிருக்கேன் கொஞ்சம் அடாவடி அரசியல் பண்ணுறவர்தான்! ஆனா காரணம் இல்லாமே யார் மேலயும் கை வைக்க மாட்டார்"

"...."

"அப்படிப்பட்டவர்கிட்டே நீ ஏன் சண்டை போட்டே நந்தினி? பாவம் நீ கோவிச்சிகிட்டேன்னு துடிச்சி போயிருப்பார், முதல்ல வீட்டுக்குப் போயி உன் அண்ணன்கிட்டே மன்னிப்பு கேளு நந்தினி!"

"சக்தி! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு! எதுக்கும் ஸ்டேஷனுக்கு போயி முதல்ல விசாரிச்சிப் பார்த்துடறேன்!" என் கோபம் உங்களுக்கு இப்ப புரியாது சக்தி"

"அண்ணன் மேல தங்கைக்கு கோபம் எல்லாம் வரக் கூடாது சக்தி! அவர் உன் மேல எவ்வளவு பாசமா இருக்கார்!"

"ஐயோ! விடுங்க சக்தி! என்னை மேலும் மேலும் குழப்பாதீங்க! சரி நான் அப்புறமா பேசுறேன் சக்தி" என்று தனது செல்போனை அணைத்துவிட்டு
குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பித்தாள்!

"ஒரு வேளை சக்தி சொல்றது சரியா இருக்குமோ............?"

பகுதி 15

Saturday, March 1, 2008

மாதங்களில் அவள் மார்கழி-13

பகுதி - 12

கண்விழித்துப் பார்த்த சக்தி இன்னமும் சுகந்தி தன் தலையணை அருகில் அழுதவாறே அமர்ந்திருப்பதைக் கண்டான்!

"என்ன சுகந்தி! இன்னமும் நீ அழுகையை நிறுத்தலையா? எனக்குத்தான் ஒண்ணும் ஆகலையே! இன்னும் ரெண்டு நாளில் எல்லாம் சரியாப் போயிடும்னு டாக்டர்தான் சொல்றாருல்ல!"

"உனக்கென்ன நீ பாட்டுக்கு சொல்லிடுவே! உன் வலி என்னென்னன்னு எனக்குன்னுத்தான தெரியும்?" தேம்பியவாறே வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வந்தன!

"அட! இதைப் பார்ரா! இங்க பாருடா! பெரிசா வலியெல்லாம் இல்லை எனக்கு! சின்னச் சின்ன காயங்கள்தான் எல்லாமே! அதனாலதான் அன்னிக்கே டிஸ்சார்ஜ் பண்ணி ஊருக்குப் போகலாம்னு அனுப்பினாங்க! இல்லாட்டி அனுமதிப்பாங்களா என்ன?"

"ஆமாடா! உனக்கு ஒண்ணுமே இல்லைதான்! இங்கே நாங்கதான் என்னமோ ஏதோன்னு பதறிகிட்டு இருக்கோம்! போடா இவனே! பெத்து வளர்த்து படிச்சிட்டு வரட்டும்னு மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சா எவனெவனோ வந்து உன்னை அடிச்சிப் போட்டுட்டுப் போறான்! நாங்க ஒண்ணும் இல்லைன்னு நிம்மதியா இருப்பமா?"

என்றவாறே அறைக்குள் நுழைந்தார் சக்தியின் அம்மா!

சட்டெனத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் சுகந்தி!

"பாரும்மா! உன் ஃபிரண்டை! எப்படி அடிச்சிருக்காணுங்கன்னு! இதுக்காகவா நாங்க அவனை அனுப்பி வெச்சோம்! "

சட்டேன அவரது கண்களும் கலங்கியது!

"அம்மா! என்ன இது! இங்கயெல்லாம் கண் கலங்கிகிட்டு! நான் நல்லா ஆகிட்டேன்மா! ஒண்ணும் இல்லை! நீங்கதான் ஓவரா கற்பனை பண்ணிகிட்டீங்க!"

"அம்மா சுகந்திக்கு ஒரு காஃபி போட்டுக் கொடேன்! வந்து ரொம்ப நேரம் ஆகுது!" என்றான் சக்தி!

"இரும்மா காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்று எழுந்தவளை

"நீங்க உக்காருங்கம்மா உங்களுக்கும் சேர்த்து நான் போட்டு எடுத்துட்டு வரேன்" என்று சமயலறை நோக்கிச் சென்றாள் சுகந்தி.

"அம்மா பார்த்தியா! உன் மருமகளை! இப்பவே உனக்கு வேலை வெக்கக் கூடாதுன்னு பார்க்குறா" என்றான் சிரித்துக் கொண்டே!

"ஆமாடா! நல்ல பொண்ணாத்தான் தெரியுறா! கண்ணுக்கு லட்சணமா மஹாலட்சுமியாட்டம் இருக்கா! உனக்கு ஒண்ணுன்னா துடிச்சிப் போயிடுறா! அன்னிக்கு உனக்கு அடி பட்டுடுச்சுன்னு தகவல் வந்ததும் ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா! ம்ஹூம்! எல்லாம் சரி! ஆனா உங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சா என்ன ஆகுமோன்னுதான் பக்கு பக்குன்னு இருக்குதுடா சக்தி"

அதற்குள் சுகந்தி வரும் சத்தம் கேட்டதும் இந்த்ப் பேச்சை அப்படியே நிறுத்திக் கொண்டாள் மங்களம்.

"என்ன! அம்மாவும் புள்ளையும் எதைப் பத்தி கவலைப் படுறீங்க?"

காபி டம்ப்ளரை எடுத்து மங்களத்திடம் நீட்டியவாறே கேட்டாள் சுகந்தி!

"எல்லாம் இவன் கல்யாண விஷயம்தாம்மா! இன்னும் ரெண்டு வருஷத்துல இவன் படிப்பை முடிச்சதும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிட்டா அக்கடான்னு நாங்க இருப்போம் இல்லை!"

டக்கென்று வெருண்ட அவள் சக்தியை நோக்கினாள். அவன் கண்களைச் சிமிட்டி புன்னகைத்தான்!

"அம்மா! அவளை ஏன் பயமுறுத்துறே! சுகந்தி அம்மா சும்மா உன்னைச் சீண்டுறாங்க! நான் சுகந்திதான் உன் மருமகன்னு சொல்லிட்டேன்"

கையிலிருந்த காஃபி டம்ப்ளரை மேசை மீது வைத்துவிட்டு சட்டென குனிந்து மங்களத்தின் பாதங்களை தொட்டு வணங்கினாள்!

அதற்கு மேல் மங்களத்திற்கும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை!

"நல்லா இரும்மா! இனிமே இவன் உன் பொறுப்பு!" என்று அவளது தோளைத் தொட்டு எழுப்பி நிறுத்தி அவளது நெற்றியில் முத்தமிட்டாள்!

"சரிம்மா நேரமாச்சு நான் கிளம்புறேன்! சக்தி வரேன்" என்று கூறிவிட்டு உற்சாகமாகக் கிளம்பினாள் சுகந்தி!

தொடரும்................!

Thursday, February 28, 2008

மாதங்களில் அவள் மார்கழி! - 12

பகுதி - 11

"நந்தினி! சொன்னாக் கேளும்மா! சக்தியை அடிக்க நான் ஆள் அனுப்பலை"

"நீங்க எதுவும் சொல்லவேணாம்! எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டித்தான் இருந்தேன்! நீங்க அனுப்பலைன்னா நீங்களே போயி ஏன் அவங்களை ஜாமீன்ல வெளியே எடுக்கணும்?-"

"ஐயோ! நான் அனுப்பாம அவனுங்களா போயி அடிச்சிட்டு என் பேரைச் சொல்லி போயி சரண்டர் ஆகியிருக்கானுங்க! கட்சில என் பேரு இப்ப கெட்டுப் போயிடக் கூடாதுன்னுதான் நான் போயி வெளியெ எடுத்தேன்! அவனுகளை அப்புறமா விசாரிச்சிக்கலாம், இப்போதைக்கு முதல்ல வெளியே எடுத்துடுங்கன்னு சொல்லிதான் இன்ஸ்பெக்டர் என்னை கூப்பிட்டாரு"

"போதும்ண்ணே! எல்லாம் போதும்! எப்ப என் மனசுக்குப் பிடிச்சவன்னு தெரிஞ்சும் அவனை அடிக்க நினைச்சியோ அப்பவே உன் தங்கச்சி செத்துட்டாண்ணே!"

"நந்தினி! அப்படியெல்லாம் பேசாதடா! என்னால தாங்க முடியாது! உனக்கு ஒண்ணுன்னா நான் துடிச்சிப் போவேன்னு தெரியாதாடா உனக்கு!"

"ம்ம் தெரிஞ்சி போச்சே இப்பதான் எல்லாம்! சக்தியை நான் விரும்பினா உன் அந்தஸ்து கௌரவத்துக்கு எல்லாம் குறைச்சல் வந்துடும்னு எனக்கே தெரியாம அவனை முடிக்க முடிவு பண்ணிட்டியேன்னா"


"நந்தினி! என்னம்மா இது! உங்க அண்ணன் இவ்ளோ தூரம் சொல்றாருன்னா உனக்கு நம்பிக்கை இல்லையா! உங்க அண்ணன் உன் மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்காரு! கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா!"

"நீங்க பேசாம இருங்க அண்ணி! எங்க அண்ணன் எப்பேர்ப்பட்டவரு! எப்பெப்ப எப்படியெல்லாம் வேஷம் போடுவாருன்னு இப்ப தெரிஞ்சி போச்சு! தங்கச்சி தங்கச்சின்னு பாசம் காட்டினதெல்லாம் வெறும் வேஷம் அண்ணி! இதயம் ஒண்ணு அவருகிட்டே இருந்தாத்தானே! இன்னும் அவரைப் பத்தி என்ன யோசிக்கணும் அண்ணி?"

"நந்தினி! கொஞ்சம் என்ன பேசுறேன்னு யோசிச்சிப் பேசு! உங்க அண்ணனைப் பத்தி உனக்கு இன்னும் முழுசாத் தெரியாது"

"மஞ்சுளா! கொஞ்சம் பேசாம இரு! நான் பேசிக்கிறேன்" என்று சமாதானப் படுத்த முயன்றான் தென்னரசு!


"தெரிய வேண்டாம் அண்ணி! தெரியவே வேண்டாம்! இது வரை தெரிஞ்சதே போதும்! இந்த மிருக குணம் உள்ளவரை என் அண்ணன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு"

"என்னம்மா நானும் பார்த்துகிட்டே இருக்கேன்! ஓவரா பேசுறியேம்மா! உங்க அண்ணனைப் பத்தி இவ்ளோ பேசுறியே! முதல்ல உன்னைப் பத்தி தெரியுமா உனக்கு?"

கோபத்தில் வெடித்தாள் மஞ்சுளா. அடுத்த கணம் பளாரென்று கன்னத்தில் இறங்கியது அறை!

"சொல்லிகிட்டே இருக்கேன்! பேசாம போடி உள்ளே"
கணீரென்ற குரலில் வந்த தென்னரசுவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாயைப் பொத்தி அழுதவாறே தந்து படுக்கையறைக்குள் நுழைந்தாள் மஞ்சுளா!

"பார்த்தீங்களா! பேசிகிட்டிருக்கும்போது பொண்டாட்டியையே இப்படி அடிக்குறீங்களே! மனுஷ ஜென்மமா நீங்க? இனிமே நான் இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்! உங்க சொத்து, அந்தஸ்து, கௌரவம் எல்லாத்தோடவுமே நீங்க சந்தோஷமா இருங்க"

அழுகையுடனும் ஆத்திரத்துடனும் வேகமாக வெளியேறினாள் நந்தினி!

............தொடரும்.