Saturday, June 27, 2009

தேடல்கள்

என் பாதை எதுவாகவிருக்கும் என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை! இருப்பினும் அவள் என்னைப் பின்தொடர முயற்சிக்கக் கூடுமெனெ எண்ணியிருந்தேன்! எவரேனும் என்னைப் பின்தொடர்வதை ஒருபோதும் நான் விரும்பியதுமில்லை. அனுமதித்ததுமில்லை!

கடந்த காலங்கள் எல்லாவற்றிலும் என் முடிவுப்படியே அனைத்தும் நடந்துகொண்டிருந்தன! இதோ கடந்து சென்ற கடைசி நொடிப் பொழுதுவரை அப்படியேதான்! இந்த நொடியிலிருந்து என்னுள் என்னையும் அறியாமல் அப்படியொரு ஐயம் தோன்ன்றியிருக்கிறது! ஏன் எதனால் என்றெல்லாம் என்னால் அறுதியிட்டுக் கூறிவிடமுடியவில்லை! ஆயினும் என் உள்மனது சொல்லிக் கொண்டிருந்தது! என்னையும் மீறி என் அனுமதியின்றி நடந்துவிடுமோ என்ற உறுத்தல் எனக்குள்ளே இப்பொழுது எழுந்துவிட்டிருந்தது!

அதோ அந்த மலர்க்கொத்து அங்காடியில்தான் முதன்முதலில் அவளைச் சந்தித்திருந்தேன்!
நான் "ஹவ் மச்?" என்றபொழுது என் முகம் பார்த்துப் புன்னகைத்தாள்! "இருநூற்று ஐம்பது மட்டும்". மூன்று நூறு ரூபாய்களைக் கையிலெடுத்துக் கொடுத்தேன்! திருப்பிக் கொடுத்த ஐம்பது ரூபாயோடு மீண்டும் ஒரு புன்னகை! அவள் உதடுகள் உதிர்த்த நன்றி ஏனோ என் செவிகளுக்குள் செல்ல வில்லை போலும்!
"என்ன?" என்று ஏறிட்டு நோக்கினேன் அவளை! மீண்டும் அவள் உதடுகள் எதையோ உதிர்த்தன! சட்டென அங்கிருந்து நகர்ந்துகொண்டாள்!

அங்காடி வாயிலை அடைந்தபொழுது, அவள் என் கைகளில் இருந்தாள்! சிறிதும் கனக்கவில்லை! நான் ஏன் அவளை அள்ளி வந்தேன்? அட! அதற்குமல்லவா நன்றி சொல்கிறாள். நியாயமாக கோவித்துக் கொண்டல்லவா இருக்க வேண்டும்! திரும்பிப் பார்த்தேன்! இப்பொழுது அவள் அங்காடிக்குள்ளேயேதானிருந்தாள்! தன் சிநேகிதியிடம் எதையோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள்! என்னைப் பற்றித்தானோ என்று நினைத்துக் கொண்டேன்!

சில நேரங்கள் எனக்குச் சிரிப்பாய்க் கூட இருந்தது! நானா இப்படி? எப்பொழுதும் அவள் முகத்தையே எண்ணிக் கொண்டிருக்கிறேன்! கல்லூரி நாட்களில் கூட எந்த ஒரு பெண்ணும் என்னுள் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கவில்லை! இப்பொழுது என்ன ஏற்பட்டது எனக்கு?

மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிட்டிவிடவில்லை எனக்கு! காரண காரியங்களை நாமேதான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையின் விளைவினூடே மீண்டும் நானங்கு சென்றபோது அவள் வேலையிலிருந்து நின்றுவிட்டிருந்தாள்! எப்படியென்று தேடுவது! பெயர் கூடத் தெரியாதே எனக்கு!

பெருமூச்சொன்றை வெளியிட்டுக் கொண்டபோது மீண்டும் என் கண் முன் தோன்றினாள். அவளது சிநேகிதியின் சிறுகுறும்பு அவள் மீதான என் ஈர்ப்பை அவளிடம் புலப்படுத்தியிருக்கிறது போலும்! என் வருகையை அவளும் எதிர்நோக்கியே இருந்து வந்திருக்கிறாள்!

பூங்கொத்து எதுவும் வாங்காத பின்னும் கூட அவளின் புன்னகை எனக்குக் கிடைத்தது!
என்னுள் எத்தனையோ பூங்கொத்துக்கள் மழையாய் விழுந்தன! இப்படியே எங்கள் சந்திப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தவண்ணம் இருந்தன! காரண காரியங்களும் தானாகவே அமைந்தன! சில என்னாலும், சில அவளாளும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவையே என்று பிரிதொரு நாளில் நாங்களிருவரும் சொல்லிச் சிரித்துக் கொண்டோம்!

மழை நின்ற பின்னாலும் சில்லென்ற தூறல்கள் விழுந்தவண்ணம் இருந்த ஒரு மழை நாளின் மாலைப் பொழுதில் என் காதலைத் தெரியப் படுத்தினேன்! அவளிடமிருந்து எந்தவொரு ஆச்சரியமோ, ஆட்சேபணையோ எழவில்லை! அவளது மௌனம் அவளுடைய இசைவுக்கான வெளிப்பாடாகப் புரிந்து கொள்ள எனக்குப் போதுமானதாக இருந்தது!

என் மீதான அவளது உரிமை அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் அவள் என்னைப் பின் தொடர்வது பொன்ற பிரம்மை எனக்குள் தோன்றலாயிற்று! எவரேனும் என்னைப் பின்தொடர்வதை ஒருபோதும் நான் விரும்பியதுமில்லை. அனுமதித்ததுமில்லை!

நாங்கள் மகிழ்ந்திருந்த கணங்கள் எல்லாம் துணுக்குற்ற சில நேரங்களில் அவளது வினாக்கள் என்னைச் சிதறடிக்க முயன்றிருந்தன! ஆயினும் நான் அவற்றை வெளிக்காட்டிக் கொண்டிராதிருந்தவனாயிருந்தேன்! என் அனுமதியையும் பெறாமலேயே என்னை ஆராயத் தொடங்கியிருக்கிறாள் என்றறிந்தபோது எனக்குள் அதிர்ச்சியும், அயற்சியும் ஏற்பட்டிருந்தன!

முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அவள் என்னை ஆக்கிரமிக்கவும் தொடங்கியிருந்தாள்! என் சட்டைப் பையிலிருந்த சாக்லேட் காகிதங்களைக் கூட சந்தேகக் கண் கொண்டு என் கண்களை அவள் ஊடுறுவிப் பார்ப்பது எனக்குச் சலிப்பைத் தந்தது!

இப்பொழுதெல்லாம் எங்கள் சந்திப்புகள் அறவே நின்று போயிருந்தது! தொலைபேசிச் சிணுங்கள்களும் இருப்பதில்லை! என்னை அவளாகவே புறக்கணித்துக் கொண்டிருந்தாள்!
தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு சென்றாள்! நியாயமான காரணங்கள் அமைந்த பொழுதும் கூட எங்கள் சந்திப்பு ஏனோ நிகழவேயில்லை! அன்றொரு நாள் அவள் பூங்கொத்து அங்காடியில் வேலையாயிருப்பாள் என்ற நம்பிக்கையில் வேறொரு இடத்தில், வேறொரு அங்காடியில் சுற்றிக் கொண்டிருந்த எங்களை எதிர்பாராத தருணத்தில் அவள் சந்தித்த பின்னர்.

இப்பொழுதெல்லாம் நான் வேறொரு மலரங்காடிக்குச் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தேன்!
"ஹவ் மச்" என்றேன். "முன்னூற்று முப்பது" என்றாள் அவள்! கூடவே புன்னகையும்!


[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]