Thursday, March 5, 2009

நாலாம்பிறை - திதி 3


பகுதி 2


தனது லேப்டாப் திரையின்மேல் கண்களை மேயவிட்டுக் கொண்டே பேசினார் ஷர்மா!

"என்ன யங்மேன்! இரவு நேரத்துல தனியா போகும்போது ஏதாச்சும் பயந்துட்டியா! ஜஸ்ட் இதெல்லாம் ஒரு பிரம்மை!"

"இல்லைங்க மிஸ்டர் ஷர்மா! ஜஸ்ட் குரல் கேட்டுது, தெளிவில்லாத வாய்ஸ் கேட்டதுன்னெல்லாம் இருந்தா பிரம்மைன்னு எடுத்துக்கலாம்! தெளிவா ஒரு செய்யுளையே சொன்னப்போ இதிலே ஏதோ ஒரு விஷயம் இருக்கணும்னுதான் நினைக்கத் தோணுது!"

"அட! அப்படியா! என்ன செய்யுள்னு உங்களுக்கு நினைவிருக்கா மிஸ்டர் நந்தா?"

"ம் நல்லா ஞாபகத்தில் இருக்கே!" என்று தன் காதில் விழுந்த சொற்களை கோர்வையாகக் கூற முடியாமல் திக்கித் திணறி சொல்லி முடித்தான்!

சற்று யோசித்த ஷர்மா

"ம்ஹூம்! நீங்க இதுவரைக்கும் ஜோதிட ஆராய்ச்சி சம்மந்தமான புத்தகங்கள் ஏதாச்சும் படிச்சிருக்கீங்களா?"

"இல்லை! படிச்சதில்லை!"

"வெரி இண்ட்ரஸ்டிங்க்! நீங்க சொன்ன செய்யுள் புலிப்பாணியார் எழுதின பாடல்களிலே ஒண்ணு! ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் 3,7,5,11 வது இடங்களில் தனித்து இருந்தால் ஜாதகன் மாய மந்திரங்கள் அல்லது வைத்தியக் கலைகளில் தேர்ச்சி பெறுவான் என்று பொருள்! ஆனா இதை எதுக்கு உங்க காதுல வந்து சொல்லணும்!"

"வைத்தியக் கலைன்னு சொன்னது ஓரளவு பொருந்தி வருது! நாம பண்ணுறதே மூலிகைகள் தொடர்பான ஆராய்ச்சிதான்! ஆனா மந்திரங்கள் எல்லாம் எதுக்காக கத்துக்கனும் அதுலயெல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லை! ஆர்வமும் இல்லை"

"ஒண்ணும் ஆச்சரியப் பட வேண்டாம் மிஸ்டர் நந்தா! உங்க டேட் ஆஃப் பர்த், டைம், பிளேஸ் ஆஃப் பர்த் சொல்லுங்க! வெரிஃபை பண்ணிடலாம்"

ஷர்மா கேட்ட தகவல்களைச் சொன்னதும் தனது லேப்டாப்பில் இணைய இணைப்பை உயிர்ப்பித்து ஒரு குறிப்பிட்ட தளத்தைத் தேடி அதில் இந்த விவரங்களை உள்ளீடு செய்தார்

"யங் மேன்! எனக்கு புரிஞ்சிடுச்சு! கடக லக்கினம் மகர ராசி! ஏழாமிடத்தில் சந்திரன் தனித்து நிற்கிறான்! ஆனா நீ மாய மந்திரமெல்லாம் கத்துக்குவேன்னு எனக்கும் நம்பிக்கை இல்லை! அஃப்கோர்ஸ் உன்னைப் போலவே எனக்கும் இவ்விஷயங்களில் நம்பிக்கையோ ஆர்வமோ கிடையாது"

அப்போது அவரது காரியதரிசி ஆனந்தி அறைக்குள் நுழைந்தாள்!
"ஷர்மா! நாம் திருவண்ணாமலை செல்ல வேண்டும்! கார் தயாராக இருக்கிறது!
இப்போது புறப்பட்டால்தான் இரவுக்குள் சென்று சேர முடியும்" என்று நினைவூட்டினாள்!

"மிஸ்டர் நந்தா! நாம மீட் பண்ணப் போறவங்க டீடெய்ல்ஸ் எடுத்துக்கிடீங்க அல்லவா?"

"ஓ! தனியா எடுத்து வெச்சிருக்கேனே"

"ஓகே! தென் லெட்ஸ் மூவ்"

மூவரும் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறினார்கள்!

ஹோட்டல் வளாகத்தை விட்டு அந்த கார் வெளியேறியதும் ஹோட்டல் காம்பவுண்ட்டிற்கு எதிரே நின்றிருந்த ராஜேஷ் தனது சட்டைப் பையிலிருந்த செல்ஃபோனை எடுத்தான்!

"மகேஷ்! கார் புறப்பட்டுடுச்சு!"

செல்ஃபோனை அணைத்துத் தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு சாலையின் இருபுறமும் கவனித்து சாலையைக் கடந்து எதிர்ப்புறம் நோக்கி நடந்தான்!

சாலையின் எதிர்ப்புறத்தை அடையச் சில வினாடிகளில்
இடதுபுறமிருந்து அதி வேகமாக சரேலெனெ வந்த அம்பாசிடர் கார் இவன் மீது மோது 6 அடி தொலைவில் இவனை வீசி எறிந்தது! விழுந்த அதே நொடியில் அவனது உயிரும் பிரிந்திருந்தது!

சாலையில் அவனது ரத்தம் படரத் தொடங்கியது!

கார் மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது! தான் ஓட்டாமல் காரின் முன்புறம் டிரைவர் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த நந்தா ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான்!

ஆழ்ந்த தியானித்திலிருந்த சுவாமி நித்தியானந்தர் சட்டென உடல் சிலிர்த்தார்! பின்னர் மெல்லிய சிந்தனையுடன் கண்திறந்தார்!

"சுந்தரேசா! அங்கப்பன் மகள் செல்லாயியின் கந்தர்வ மணம் முடிவுக்கு வந்துவிட்டதென்று அவளிடம் தெரிவித்துவிடு! மேலும் அங்கப்பனை உடனடியாக என்னை வந்து சந்திக்கும்படிக் கூறி இங்கே அழைத்து வா! அவருக்குச் சில வேலைகள் இருக்கின்றன!"


தொடரும்...............!

Tuesday, March 3, 2009

நாலாம்பிறை - திதி 2


முதல் பகுதி

"சுவாமி"

குரல் கேட்டு தியானத்திலிருந்து விடுபட்டுக் கண்விழித்தார் நித்தியானந்தர்! இடுப்பில் சுற்றியிருந்த காவி வஸ்திரமும் விபூதிப் பட்டைகள் அணிந்த திருமேனியுமாய் முகத்தில் நிறைந்திருந்த பேரமைதியும், மேனியை அலங்கரித்த ருத்திராட்ச மாலைகளும் சித்தர் என்னுமளவிற்கு உண்டான தேஜஸ் கொண்ட முகப் பொலிவும் கண்களுக்குள் குடிகொண்டிருந்த சாந்தமும் பார்த்தவுடன் கைகூப்பித் தொழச்செய்பவையான தோற்றம் அவருடையது!
எத்தனை வயதைக் கடந்திருப்பார் என்று எளிதில் கணக்கிட்டுவிட முடியாது!

தலையில் முடிந்த நரைத்த ஜடாமுடியை வைத்து வேண்டுமானால் எண்பதைக் கடந்திருப்பார் என்று கூற முடியும்!

எதிரே பணிவாய் நின்றிருந்த சுந்தரேசனை புன்முறுவலுடன் நோக்கினார்!
"என்ன சொல்ல வருகிறாய்" என்று அவரது பார்வை கேட்டது!

"சுவாமி! ஒரு சந்தேகம்!" என்றான் சுந்தரேசன்!
"கேள்"
"இப்படி விபரீத சிந்தனைகளுடன் தீய சக்திகள் செயலாற்ற முனைந்திருக்கும்போது அவற்றைத் தடுப்பது எப்படி? மனித இனத்திற்கு தீங்குகள் விளையும் அல்லவா? அவர்களிடமிருந்து அப்பாவி மக்களைக் காப்பது எப்படி சுவாமி"

"ஹெஹெ!" மந்தகாசப் புன்னகையுடன் சிறிது மௌனம் சாதித்தார்!

"சுந்தரேசா! எப்பொழுதெல்லாம் தெய்வ சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அற்ப மானிடர்கள் விபரீத விளைவுகளை ஏற்படுத்த எத்தனிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் இறைவன் தன்னால் அனுப்பப்பட்ட மானிடர்கள் மூலமே அவர்களைத் தடுத்து தண்டித்து பிறரைக் காக்கவும் செய்கிறான் என்பதை அறிந்ததில்லையா நீ"

"அது உண்மைதான் சுவாமி! ஆனால் நீங்கள் சொல்லிய இத்தகைய தீயவர்கள் சாதாரண மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டு மந்திர தந்திர சக்திகளால் தீங்கு விளைவிக்க இருக்கிறார்களே! இவர்களிடம் சாதாரண மானிடரால் எப்படி போரிட முடியும்? இறைவனே அல்லவா அவதரிக்க வேண்டும்"

"ம்! இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள் உண்டு! இவர்களை வெல்லுமளவிற்கு மந்திர தந்திர திறமைகளுடன் இனிமேலா இறைவன் படைக்கப் போகிறான்! ஏற்கனவே படைத்து விட்டிருக்கிறான் சுந்தரேசா!
அவன் விரைவில் இங்கே வரவேண்டும்! அவனது பணி இங்கிருந்தே தொடங்க வேண்டும் என்பது எழுதப் பட்டிருக்கிறது!"

"அம்மானுடன் இன்னும் தன்னை உணராத நிலையில் இருக்கிறான்! உணர்ந்தபின் அவனது பணி அவனுக்கு உணர்த்தப் படும்! அவனுக்கு அழைப்பு நேற்றே அனுப்பப்பட்டு விட்டது என்பதை அறியமாட்டாய் நீ"

"ஆஹா! அப்படியெனில் நிம்மதியாய் இருக்கிறது சுவாமி!"

"சுந்தரேசா! உலக உயிர்களுக்காக உன் மனம் கொள்ளும் கவலை எனக்கு ஒருபுறம் மகிழ்வை அளித்தாலும் உலக நிகழ்வுகள் உன்னை சஞ்சலத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் இன்னும் நீ பக்குவப் படாமால் இருக்கிறாயே என்று என் உள்ளம் துணுக்குறுகிறது"

"என் செய்வது சுவாமி! தீய சக்திகள் அழிவுப் பணிக்கான ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டன என்று நீங்கள் சொன்ன கணத்திலிருந்தே என் மனதில் கவலை குடி கொண்டு விட்டது! தவறெனில் மன்னியுங்கள் சுவாமி"

"ம்ஹூம்! இது உன் தவறல்ல சுந்தரேசா! இன்னும் சில காலம் ஆகும்! சஞ்சலங்களில் இருந்து உன்னை நீ விடுவித்துக் கொள்ள! சரி! நேரமாகிவிட்டது!
என்னுடன் வா! சில மூலிகைகள் தேட வேண்டிய வேலை இருக்கிறது!"
என்று கூறியவாறு எழுந்து குடிலின் வேலியைக் கடந்து அந்த காட்டுப் பகுதிக்குள் ஒற்றையடிப் பாதையில் நுழைந்தார் நித்தியானந்தர்! அவரைப் பின் தொடர்ந்து சென்ற சுந்தரேசன் சில அடிகள் கடந்து ஒரு பெரிய ஆலமரத்தைக் கடக்கும்போதுதான் நிமிர்ந்து பார்த்தான்..

மரத்தில் விழுதொன்றில் விநோதமான ஒரு துணிப்பையொன்று கட்டப் பட்டிருந்தது! தினமும் கடந்த போதெல்லாம் பார்த்ததில்லை! புதிதாக இருந்தது!

"சுந்தரேசா" நித்தியானந்தரின் குரல் கேட்டு மீண்டும் கவனத்தைப் பாதையில் செலுத்தி வேகமாக அவரைப் பின்தொடர்ந்தான்!


இவர்களின் பாதையில் எதிர்புறம் இருந்து விறகு பொறுக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்த பெண்கள் மூவர் தங்கள் தலையிலிருந்த விறகுச் சுமைகளைக் கீழே வைத்துவிட்டு

"கும்புடுறேன் சாமி" என்று அவர் காலில் விழுந்து வணங்க
"ம்ம்! நலமுடன் வாழ்க" என்று ஆசீர்வதித்து அவர்களுக்கு தன் மடியிலிருந்து விபூதியை எடுத்து வழங்கினார் நித்தியானந்தர்!

"என்னம்மா! காய்ந்த குச்சிகளைத்தானே பொறுக்கிக் கொண்டு போகிறீகள்? மரம் செடிகளில் கை வைப்பது இல்லையே" என்று சிரித்தவாறே கேட்டார்.

"ஐயயோ! அப்படியெல்லாம் செய்வமா சாமி! காஞ்ச குச்சிகளைத்தான் எடுக்குறோம்! நீங்க சொன்னமாதிரித்தான் நடந்தாத்தானே எங்க பொழப்பு பிரச்சினையில்லாம போகும்"
கொஞ்சம் வாயாடிப் பேசும் பெண்ணொருத்தி முன்வந்து பேசினாள்! மீதமிருவரும் மௌனமாக நின்றார்கள்!

"ம்ஹூம்! நல்லது! அங்கப்பன் மகள் செல்லாயி மௌனத்தில் ஏதோ மர்மர் இருப்பது போல் இருக்கிறதே" என்று நித்யானந்தர் மர்மப் புன்னகையுடன் கேட்க
விக்கித்து நிமிர்ந்தாள் செல்லாயி!

கல்லூரி நாட்கள்

முதல் நாள் கல்லூரிக்குள் நுழைந்தபோது முதலில் கண்ணில் தென்பட்டவள் அவள்தான் அன்பரசி! அழகான ராட்சசி, தேவதை, நடமாடும் தென்றல் என்றெல்லாம் வர்ணிக்கும் அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஃபிகர் எல்லாம் இல்லை! கல்லூரி மாணவர்களுக்கே உரிய பாஷையில் சொல்ல வேண்டுமெனில் அட்டு ஃபிகர்! அதைச் சொன்னதற்குக் கூட புதுசாய்ச் சேர்ந்த கூட்டாளி தினேஷ் என்னைக் கிண்டலடித்தான்! அப்பக் கூட இதை ஃபிகர் என்று சொன்ன முதல் ஆள் நான் தான் என்று!

லைப்ரரி எங்கே இருக்கு என்று கேட்டபோது அளவான புன்னகையுடன் கைகாட்டினாள். "அதோ அந்தப் பக்கம்"

பின்னர் நாட்கள் சென்றுகொண்டிருந்தன! அவ்வப்போது தலை நிமிர்ந்து பார்த்தால் சிறு புன்னகை! அவ்வளவே! யாருடனும் எளிதில் சிரித்துப் பேச மாட்டாள்! நண்பர்களுக்குள் பேசிக் கொள்வார்கள்! "டேய் அவளா பேசணும்னு எதிர்பார்க்கிறே! அவ ஒரு விடியா மூஞ்சிடா"

அவளுக்கும் ஒருவன் காதல் கடிதம் நீட்ட அதை வாங்கிய அவள் மிகவும் பொறுப்பாக மெனக்கெட்டு எழுதி முடித்த அசைண்மெண்டைப் போல் விடுதி வார்டனிடம் சமார்த்தாகக் கொண்டு போய் சமர்ப்பித்தாள்! அவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தார்களோ இல்லையோ எங்களின் கிண்டல்களால் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தான்!

"மச்சி! நீ வார்டனுக்கு லவ் லெட்டர் எழுதியிருந்தேன்னா கூட பெருமைப் பட்டிருப்பேண்டா! கரெக்டான ஆள் மூலமா கொடுத்தனுப்பிட்டியேன்னு உன் புத்திசாலித்தனத்தை வரலாற்று புத்தகத்துல எழுதி வெச்சிருபோம்! போயும் போயும் இவளுக்கு லெட்டர் எழுதி எங்க மானத்தையும் வாங்கிட்டியேடா"

இப்படியே ஆளுக்கு ஆள் அவளை ஓட்டிக் கொண்டிருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அவளும் கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேறிக் கொண்டே வந்ததுபோலிருந்தது எனக்கு!

எங்களுடன் நன்றாகப் பழகிய சில மாணவிகள் கூட அவளிடம் கொஞ்சம் டிஸ்டண்ட் வெச்சிக்கோ என்றே கூறியிருந்தார்கள்! ஆனாலும் ராஜி மட்டும் கொஞ்சம் குளோசாக அவளுடன் பழகிக் கொண்டிருந்தாள்! அருகருகேதான் அமர்வார்கள்!

"ஹே ராஜி! எங்க இன்னிக்கு உன் ஃபிரண்டு காணோம்?"

"ஏன் உதை வேணுமா உனக்கு? அவளைப் பார்க்காம இருக்க முடியலையா? எல்லாம் திமிரு"

கம்ப்யூட்டர் லேபில் டாஸ் மெசேஜ் மூலமாக ஒரு நாள் செய்தி அனுப்பினேன்!
"ஹாய்! ஹவ் ஆர் யூ?"
கம்ப்யூட்டரில் ஐபி மட்டுமே தெரியும் என்பதால் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்! பின்னர் அமைதியாக அமர்ந்து கொண்டாள்!

நான் ராஜியை அழைத்தேன்!
"ராஜி! ஹாய் ஹவ் ஆர் யூன்னு ஒரு மெசேஜ் அனுப்பினேன் கோவிச்சிக்க மாட்டேளே!"

"நீ எவ்ளோ தடவை சொன்னாலும் அடங்க மாட்டே! அவளோட அப்பாவை கூட்டிட்டு வரப் போறா! உதை வாங்கித்தான் அமைதியாவே நீயி!" சன்னமான குரலில் எச்சரித்தாள் ராஜி!

"ஐயயோ! அப்போ அவகிட்டே நான்தான் அனுப்பினேன்னு சொல்லிடு! அப்படியே ஸாரி சொன்னேன்னும் சொல்லிடு"

தலையாலடித்துக் கொண்டு எழுந்து அவளருகே சென்றாள்.

சிறிது நேரத்தில் எனக்கும் மெசேஜ் வந்தது!

"ஃபைன், நோ நீட் ஆஃப் ஸாரீஸ்"

"அட" என்று வியந்து கொண்டேன்! எழுந்து நின்று பார்த்தேன்! புன்னகைத்தாள்!

இப்பொழுதெல்லாம் ராஜியுடன் இருக்கும் நேரங்களில் என்னுடனும் அவ்வப்போது சிரித்துப் பேசுகிறாள்! அவ்வப்போது என் மனசுக்குள் வந்து சென்றது! ஆரம்பத்தில் நான் செய்த வர்ணனை " அட்டு ஃபிகரு"


எலக்ட்ரானிக்ஸ் லேபில் என் பேட்சில் இரண்டு பெண்கள் இருந்ததாலும், அன்பரசியின் பேட்சில் அவள் மட்டுமே பெண் என்பதாலும் லெக்சரரிடம் கேட்டு எனது பேட்சிற்கே மாறிக்கொண்டாள்!

அன்று எங்கள் லதா மேடம் ஒரு சர்க்யூட் பற்றி எங்கள் பேட்சிற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்க

நாங்களிருவரும் சற்றுத் தள்ளி பேசிக் கொண்டிருந்தோம்!

"தண்ணி அடிச்சா மயக்கமா வருமா? எப்படி இருக்கும்" இது அவள்

"ஆமா! அதாவது அப்படியே பூமியிலேயே பறக்குற மாதிரி இருக்கும்! நம்ம வெயிட்டே நமக்குத் தெரியாது! ஒரு மாதிரி கிறக்கமா இருக்கும்!"

"எதுக்காக அதுலே கூல்ட்ரிங்க்ஸ் கலந்துக்குறாங்க! அப்படியே குடிச்சா என்ன ஆகும்?"

"அப்படியேவும் சில பேரும் குடிப்பாங்க! ஆனா ஆல்கஹால் ஸ்ட்ராங்கா இருக்கும்! வயிறு எரியும்! கெமிஸ்ட்ரி லேப்லே ஆசிட்லே தண்ணி கலந்தா எஃபெக்ட் குறையுமல்ல அது மாதிரி"

அவள் விழிகள் வியப்பில் விரிந்தன! எனக்கு அப்போதும் கூட ஏனோ அவள் அழகாகத் தெரிந்தாள்!

அதற்குள் எங்கள் மேடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்து விட

"இதுக்குத்தான் அந்த பேட்சிலேர்ந்து இந்த பேட்சுக்கு மாறி வந்தியா?...." என்று திட்ட ஆரம்பிக்க தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்!

"ஹேய் ஹே! எதுக்கு இப்ப அழறே நீ! என்னைக் கூடத்தான் திட்டினாங்க! என்னைப் பாரு! நான் அழுதனா?"

ராஜி முறைத்துக் கொண்டிருந்தாள்!

"இங்க பாருப்பா! பேசினோம்னு மட்டும் தெரிஞ்சிதான் திட்டினாங்க! இன்னும் என்ன பேசினோம்னு தெரிஞ்சிருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சிப்பாரு"
என்று சமாதானப் படுத்தினேன்!

"இனிமெ மேடம் திட்டினதுக்கெல்லாம் அழக் கூடாது! அமைதியா தலையை குனிஞ்சி நின்னுகிட்டிருந்தா போதும்! வாய் வலிக்க ஆரம்பிச்சதும் அவங்களா நிறுத்திடுவாங்க! என்ன" என்றபோது க்ளுக் என்று சிரித்தாள்!

அன்று மதிய உணவு வேளையில்
"நான் கொண்டு வர சாப்பாடெல்லாம் சாப்பிட மாட்டீங்களா" என்றாள்.

"ஏன் சாப்பிடாம! கொடுத்தா சாப்பிடுவோம்!" என்றேன்!

"சரி கையை நீட்டுங்க"

ஒரு கை சாதம் எடுத்து என் கையில் வைதுக் கொண்டே கேட்டாள்! ராஜி உங்களை அண்ணான்னு சொல்லுறா? நானும் உங்களை அண்ணான்னு சொல்லாமா?

"ஹக்!" சோறு தொண்டையிலேயே சிக்கி நின்று கொண்டது!
ராஜி தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்!

"அம்மா தாயே! ஒரு தங்கச்சியை வெச்சிகிட்டே நான் படுற பாட்டை சொல்லி மாளாது! நீ வேற வேணாம் தாயே!" சிரித்துக் கொண்டே சொல்லி மழுப்பினேன்!

ராஜி என்னை பாவமாகப் பார்த்தாள்! நான் சட்டென அங்கிருந்து நகர்ந்து கொண்டேன்!

சங்கமம் - போட்டிக்காக : தலைப்பு "கல்லூரி"