Monday, January 23, 2006

அமானுஷ்ய வாசகி #1

வாராந்திரப் பத்திரிக்கையொன்றின் தொடர்கதைக்கு நாலாவது அத்தியாயத்தை முடித்து நிமிர்ந்தபோது மணி இரவு 12.30 ஐத் தாண்டியிருந்தது. இருப்பினும் தூக்கம் வரவில்லை. படுக்கையறையில் சிணுங்கிய என் இரண்டு வயது மகனை தூக்கக் கலக்கத்துடனேயே தட்டி விட்டுக் கொண்டிருந்தாள் என் மனைவி.

மேசை மீதிருந்த வாசகர் கடிதங்களை எடுத்து பதில் எழுத ஆரம்பித்தேன். கடிதங்களுக்கு மத்தியில் ஓர் கல்யாணப் பத்திரிகையும் இருந்தது. பிரித்துப் பார்த்தேன். என் நண்பன் ஒருவனின் தங்கைக்கு திருமணம். நடைபெறும் ஊரின் பெயர் சற்று பரிச்சயமானதாக இருந்தது. சற்று யோசித்துப் பார்த்ததில் அதே ஊரில் இருந்து எனக்கு தொடர்ந்து ஒரு வாசகியின் கடிதங்கள் வருவது எனக்கு நினைவுக்கு வந்தது. சரி இந்த திருமணத்திற்கு சென்று விட்டு அப்படியே அந்த வாசகியையும் சந்தித்து வரலாம் என்று முடிவு செய்தேன். இதன் மூலம் அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். எந்த ஊருக்குச்சென்றாலும் அந்த ஊர் வாசகர்களை வலிய சென்று சந்திப்பது என் வழக்கம்.


முகூர்த்தம் முடிந்த கையோடு சிற்றுண்டி முடிந்தவுடன் நண்பனிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். அந்த வாசகியின் முகவரியை கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை. தெரு முனையில் அந்த பெண்ணின் பெயரை சொல்லி விசாரித்தபோது ஏற இரங்க பார்த்தது ஏன் என்று மட்டும் புரியவில்லை. அந்த பெண்ணின் கணவர்தான் என்னை வரவேற்றார். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவர் முகம் சற்று கவலையடைந்ததையும் கவனித்தேன்.
"உங்க கதைகள்னா அவளுக்கு ரொம்ப உசிரு சார், உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவா, ஆனா பாருங்க நீங்க வந்த நேரம், அவ இப்ப உசிரோடயே இல்லை"
அதிர்ச்சியில் சற்று நேரம் அமைதியாய் இருந்தேன்.
"குழந்தைங்க.."
"இல்லை சார், போன வருஷம்தான் பிரசவம் சிக்கலாகி அம்மா குழந்தை ரெண்டு பேருமே...."
அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. தன் மனைவி எழுதும் வாசகர் கடிதங்களின் பிரதிகளையெல்லாம் எடுத்து வந்து காண்பித்தார். அதே அழகழகான கையெழுத்து. நெஞ்சு கனத்தது எனக்கு. சற்று நேர மௌனத்திற்குப் பின் ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டேன். தெரு முனை வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்த பின்னும் கூட நெஞ்சு கனமாகவே இருந்தது. என் மனைவி கேட்டாள். "என்னங்க உடம்பு ஏதும் சரியில்லையா? ". "ஒன்றுமில்லை" என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறினேன்.

ஏதொ ஒன்று மட்டும் என் உள்ளத்திற்குள் நெருடியது. கடைசியாக வந்த கடிதங்களின் பிரதி அவள் கணவனிடம் இல்லாததன் காரணம் என்ன? என்னுடைய ஃபைலை எடுத்து புரட்டினேன்.
நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பு அதிகமாகித்தான்போனது. கடிதங்கள் எழுதப்பட்ட தேதிகளைப் பார்த்தால், அவள் இறந்த தேதிக்குப் பிறகு எழுதப்பட்டவைகள்..................


"என்னங்க, உங்க ஃபேவரைட் ரசிகைகிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு, மேசை மேல வச்சிருந்தேன் பார்க்கலியா?" என்றால் என் மனைவி. பிரித்திப் பார்த்தேன். அடுத்த வாரம் பிரசுரத்திற்கு அனுப்ப இரண்டு தினங்களுக்கு முன்பே எழுதி முடித்த என் "நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்" என்ற நாவலை படித்ததாகவும், வெகுவாகப் பாரட்டியும் எழுதியிருந்தாள் அந்த அமானுஷ்ய வாசகி.

இதற்குப் பின் ;http://pithatralgal.blogspot.com/2006/01/2.html

No comments:

Post a Comment