Sunday, November 11, 2007

மாதங்களில் அவள் மார்கழி! - 10

பகுதி - 9

ஒன்றரை நாட்கள் கழித்து மெல்லக் கண் திறந்தான் சக்தி!
தான் இருப்பது ஒரு மருத்துவமனையின் சூழல் என்று மங்கலாகத் தெரிந்தது. தலை மற்றும் வலது கையில் வலியை உணர்ந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் நினைவிற்கு வந்தது. லஞ்ச் பிரேக்கில் நந்தினியுடன் கேண்டீன் நோக்கிச் சென்றதும் அப்போது எதிரே நன்கைந்து பேர் ஓடி வந்ததும், தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்பதை உணர்ந்து சுதாகரிப்பதற்குள் தபதபவென தன் மீது தொடுக்கப் பட்ட தாக்குதல்களும்.
சட்டென அப்போது தன்னுடன் நந்தினியும் இருந்தது நினைவில் வந்தது.

"கடவுளே அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது" மனம் பதைத்தது.

மெல்ல வலது கையை உயர்த்த முயற்சித்தான். முடிய வில்லை. வலி உயிர் போய்விடும்போல் இருந்தது. யாரேனும் அருகில் இருக்கிறார்களா என்று பார்த்தான். அறை வாசலை ஒரு நர்ஸ் கடந்து போவது தெரிந்தது. குரலை உயர்த்தி அழைக்க முயன்றான். சப்தம் அதிகம் எழவில்லை.

"சிஸ்டர்" முணகலாக குரல் வெளிப்பட்டது. உதடுகளிலும் காயமடைந்திருப்பதாகத் தோன்றியது. உதடுகளும் கொஞ்சம் தடித்துப் போயிருந்தன. அப்படியே மீண்டும் மயங்கிப் போனான்.

கட்டிலருகே யாரோ வந்தது போல் தோன்ற மீண்டும் கண் விழித்தான்.
நந்தினி கட்டில் அருகே நின்றிருந்தாள்.

"நல்ல வேளை அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை போலும்.." உள்ளூர நிம்மதி அடைந்தான்.

"ந..ந..ந்தினி"

சட்டென கவனம் கலைந்த நந்தினியின் முகத்தில் புன்னகை பிறந்தது.

"சக்தி.. ஆர் யூ ஆல் ரைட்?"

அவளுக்குக் குரல் தழுதழுத்தது. சட்டென கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. இரு கரங்களாலும் முகம் பொத்தி அழத் தொடங்கினாள்.

இவனால் தொடர்ந்து பேசவும் முடியவில்லை.
"எதற்காக அழுகிறாள் என்றே தெரியவில்லை. அழுகையை எப்படி நிறுத்துவது? என்றும் புரியவில்லை".

அப்படியே கண்களை மூடிக் கொண்டான். இப்போது அவன் கண்களில் இருந்தும் ஒரு சொட்டு கன்னத்தில் வழிந்தது.


சிறிது நேரத்தில் அவளது அழுகை ஓய்ந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் புன்னகைத்தாள்.

"சாரி சக்தி! " என்று அவனது இடது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

தொடரும்.....................!

No comments:

Post a Comment