Wednesday, July 25, 2007

மாதங்களில் அவள் மார்கழி! - 3

பகுதி - 2

8.30 மணி ராஜகோபால் பஸ்ஸைப் பிடித்தாக வேண்டும். இப்போதே மணி 8 ஆகியிருந்தது. அவசரமாக இட்லியை விழுங்கிக் கொண்டிருந்தேன். பேருந்து நிலையத்தை அடைய எப்படியும் 15 நிமிடம் நடந்தாக வேண்டும்.

"இன்னும் ஒரே ஒரு இட்லியாவது வெச்சிக்கோடா" என்ற அம்மாவின் குரலைப் பொருட்படுத்தாது, தட்டை வாஷ் பேசினில் போட்டுக் கை கழுவிக் கொண்டு ஷூவை மாட்டலானேன்.

பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போதே விளம்பர காண்ட்ராக்டரின் ஒலி பெருக்கி தனது வழக்கமான
"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே" என்ற பாடலுடன் தனது பணியைத் துவங்கி இருந்தது.

பாடல் முடிவதற்குள் பேருந்து வந்துவிடும். வழக்கமாக இது நடப்பதுதான். 8.30 மணிக்கு வந்த வேகத்தில் புறப்படும் பேருந்து சரியாக 9.00 மணிக்குள் வண்டி கேட் ஸ்டாப்பிங்கை அடைந்துவிடும்.
இறங்கி ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்குள் சென்று அமர்வதற்குள் முதல் பீரியட் ஆசிரியர் உள்ளே வந்து விடுவார்.

அடித்து பிடித்து பேருந்திற்குள் ஏறியதும் வழக்கம் போல ஜூனியர் மாணவன் வடிவேலு சீட் போட்டு வைத்திருந்தான்.

வகுப்பிற்குள் நுழையும் முன்னரே
"டேய் சக்தி, பிரின்ஸி ரூமுக்கு வரச் சொல்லி இருக்காங்களாம், போய்ப் பார்த்துட்டு வந்துடு, நேத்து என்ன பண்ணினியோ தெரியலை"

நமட்டுச் சிரிப்புடன் சொன்னான் பாலன்.
கேட்டதும் வியப்பாக இருந்தது.

"அட்டெண்டன்ஸ்லாம் 96%க்கு மேல வெச்சிருக்கேனே" என்ற யோசனையுடன் பிரின்ஸிபால் அறை நோக்கி நடந்தேன்.

அங்கே ஏற்கனவே மற்ற டிபார்ட்மெண்ட்களில் இருந்தும் கூட இன்னும் சில மாணவர்கள் நின்றிருந்தனர். "அட! எல்லாருமே நல்லா படிக்குற பசங்கதான், அப்போ பிரச்சினை ஏதும் இருக்ககது" என்று எனக்கு நானே சமாதானம் ஆனேன்.

எனது டிபார்ட்மெண்ட் சிவாவும் அங்கேதான் நின்றிருந்தான்.
"மச்சான்! பெரிசா லெக்சரர் கொடுக்கப் போறாருன்னு நினைக்கிறேன்"

சிறிது நேரத்தில் காத்துக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் உள்ளே வரச் சொன்னதாக பியூன் வந்து சொன்னார்.

உள்ளே சென்று அவரது டேபிளைச் சுற்றி நின்றோம்.

எல்லோரும் வந்தாயிற்றா எண்று உறுதிப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார் பிரின்ஸிபால்.
"உங்களையெல்லாம் எதுக்கு வரச் சொல்லி இருக்கேன் தெரியுமா? வருஷா வருஷம் நம்ம பாலிடெக்னிக்கிலே டிப்ளமோ படிக்குற பசங்க குறைந்த பட்சம் பத்து பேராவாது நல்ல பெர்சண்டேஜோட வெளிய போயி, கவர்மெண்ட் கோட்டாவிலயே இன்ஜினியரிங்க் காலெஜ்ல சீட் வாங்குறாங்க. அதுவும் கவர்மெண்ட் காலெஜ்லயே ஃபுல் மெரிட்ல போறாங்க!

அந்த வகைல உங்க பெர்பர்மான்ஸ் எல்லாம் நாங்க பார்த்துகிட்டுதான் இருக்கோம்! இது வரைக்கும் நீங்க எல்லாருமே 90 க்கு மேல பெர்சண்டெஜ் வெச்சிருக்கீங்க! இந்த செமஸ்டர்தான் கடைசி செமஸ்டரும் கூட! நீங்க இப்பதான் கவனமா இருக்கணும்!

கொஞ்சம் கூட கவனத்தைச் சிதறவிடாம இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து படிச்சீங்கன்னா நீங்க 95 பர்சண்டேஜ் கண்டிப்பா வாங்கிடலாம்!

அதுதான் நீங்க எங்களுக்கு செய்ய வேண்டியது! எங்களுக்கு மட்டுமில்லை! உங்களைக் கஷ்டப் பட்டு படிக்க வைக்குற உங்க பேரண்ட்ஸ்க்கும் நீங்க செய்ய வேண்டியது இதுதான்! மேல படிச்சி நல்ல வேலைல சேர்ந்து, நிறைய சம்பாதிச்சி கொடுப்பீங்கங்குறது அப்புறம்! இப்ப இருக்குற நிலைமைல மேற்கொண்டு இன்ஜினியரிங் காலேஜ் சேர்க்கணும்னா என்ன செலவாவுமோ, எவ்வளவு செலவாவுமோன்னு அவங்களைக் கவலைப் பட விடாம நீங்க எல்லாரும் மெரிட் கோட்டாவுல சேர்ந்து அவங்களுடைய பாரத்தைக் குறைக்கணும். அதுதான் முக்கியம்! என்ன புரிஞ்சிதா!

இதுதான் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது. நீங்களும் நல்லா படிங்க! உங்க ஃபிரண்ட்ஸ்க்கும் சொல்லிக் கொடுத்து அவங்களையும் நல்ல மார்க்கோட பாஸ் செய்ய வையுங்க!

ஆல் த பெஸ்ட்!

நீங்க இப்ப போகலாம்"

ஒரே மூச்சில் பேசி முடித்து எங்களை வகுப்பிற்குச் செல்ல அனுமதித்தார்.

தொடரும்............................................................!

No comments:

Post a Comment