Tuesday, August 7, 2007

மாதங்களில் அவள் மார்கழி! - 4

பகுதி - 3

வினாத்தாள் கையில் வந்து சேர்வதற்குள் வியர்வை ஆறாய் ஓடிவிட்டது. கடைசித் தேர்வு இது.
இது வரை எழுதிய அனைத்தும் நன்றாகச் செய்து விட்டேன். இன்று ஏனோ இதயத் துடிப்பு அதிகமாக இருந்தது. ஒரு மார்க் விட்டாலும் கவுன்சிலிங்கில் ரேங்க் மாறும் என்பது தெரியும். அதுக்கு வாய்ப்பு கொடுக்கலாகாது.

வினாத்தாளை வாங்கிப் பார்த்ததும்தான் அப்பாடா என்றாகியது. எல்லாம் தெரிந்த வினாக்கள்தான். நிதானமாகத் திட்டமிட்டு எழுதலாம். பெரும்பாலான வினாக்களுக்கு வரைபடமும், விளக்கமும் இருந்தாலே போதும். மற்றவை நிரல்கள் எழுதுவதுதான். விளக்கமாக எழுதவேண்டியவை சில வினாக்கள் மட்டுமே.

ஐந்து வினாடி கண்களை மூடி ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

அவள் என் தலை கோதினாள். விரல்களைப் பிடித்துக் கொண்டாள். கண்களில் கண்ணீருடன் முகவாய் தொட்டு என் முகத்தை நிமிர்த்தினாள்.

"டேய்! நிஜமாவே நீ மெட்ராஸ் போயிடுவியா?". என் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

"ச்சே! என்ன நினைப்பு இது? என்னை சுதாகரித்துக் கொண்ட நான் என்னை நானே கடிந்து கொண்டேன்.

விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தேன்.


சரியாக இரண்டரை மணி நேரத்திற்குள் எழுதி முடித்தேன். பத்து நிமிடம் விடைகளைச் சரிபார்த்து தாள்களை இணைத்துக் கட்டி கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தேன்.

நான் வெளியே வந்தபொது எனக்கு முன்பே தேர்வை முடித்துவிட்டு பலர் வெளியே காத்திருந்தனர்.

தோளில் கை போட்டவாறு உடன் நடந்தான் சிவா!

"டேய் சக்தி! இன்னியோட முடிஞ்சுதாடா நம்ம பாலி டெக்னிக் லலஃப்?"

"ஏய் என்னாச்சு! பாலி டெக்னிக் முடிஞ்சா என்னடா? அதான் அடுத்து காலேஜ் படிக்கப் போறமே?"

"அப்பவும் இதே மாதிரி ஒரே காலேஜ்ல, ஒரே கிளாஸ்ல இருப்போமா சக்தி?"

"..."

"என்னடா ஒண்ணும் பேச மாட்டேங்குறே? சொல்லுடா நாம இதே மாதிரி ஒண்ணா இருப்பமாடா?" அவன் குரல் தழுதழுத்தது.

"சொல்லுடா சக்தி" என்று என்று மீண்டும் என்னை உலுக்கினான்.

நான் அழுது கொண்டிருந்தேன்.

துள்ளித் திரிந்த அந்த குதூகலமான நாட்கள் என் நெஞ்சில் வந்து போயின. வகுப்பு நேரம் போக மீதி நேரங்களில் கலாய்த்தலும், காமெடியுமாய்.. என்னையும் சிவாவையும் தனித்தனியே பார்ப்பதே அரிது அந்த நாட்களில்.

மூன்று வருடங்களும் ஒரே வகுப்பு. அடுத்தடுத்த இருக்கை.

எனக்குள்ளும் அந்த கேள்வி எழுந்தது.

"மீண்டும் ஒன்றாய்ப் படிக்க முடியுமா?"

அவனும் சத்தமாக அழத் தொடங்கி இருந்தான்.


தொடரும்...............................................!

No comments:

Post a Comment