Friday, February 27, 2009

நாலாம்பிறை - திதி 1


நந்தா என்கிற நந்தகோபால் விமான நிலையத்தை நெருங்குவதற்குள் மணி இரவு 11 ஆகிவிட்டிருந்தது. காரை பார்க் செய்துவிட்டு விரைந்து உள்ளே சென்றான். சரியாக 11.20 க்கு விமானம் வந்திறங்கிவிடும். நியூயார்க்கிலிருந்து வரும் ஜெட் ஏர்வேஸ் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை முத்தமிட்டபோது நந்தா வரவேற்புப் பகுதியை அடைந்திருந்தான்.

வெகுநேரம் காக்க வைக்காமல் உற்சாகமான புன்னகையுடன் வெளிவாசலை நோக்கி நடந்தார் புரஃபசர் ஷர்மா! ஐம்பதைத் தொடும் வயதை அறிவிக்கும் வண்ணம் அவரது முன்னந்தலையில் காணாமல் போயிருந்த கேசமும், பின்னந்தலையின் நரையும் பளிச்சென வெளிப்பட்டிருந்தன. இருப்பினும் வயதை ஒவ்வாத சுறுசுறுப்பு அவரது நடையில் தெரிந்தது! அவருடன் உதவியாளினி ஆனந்தியும் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். இருபத்தைந்தைக் தைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நம்ப மறுத்தாலும் இருபத்தெட்டைக் கடந்து இரு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன என்பதே உண்மை!

வரவேற்புப் பகுதியை அடைந்தவுடன் தேடுவதற்கு வாய்ப்பளிக்காமல் "மிஸ்டர் ஷர்மா" என்று குரல் கொடுத்தான் நந்தா. பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டே விமான நிலையத்தை விட்டு வெளியேற லேப்டாப் மற்றும் இதர பெட்டிகளை டிராலியில் வைத்து உருட்டிக் கொண்டு பின் தொடர்ந்தாள் ஆனந்தி!

அவர்கள் மூவரையும் நிரப்பிக் கொண்டு நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையிலுள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டல் நோக்கி புறப்பட்டது கார்!

சாலையில் கவனத்தை வைத்து ஓட்டிக் கொண்டே வினவினான் நந்தா!
"பயணம் எப்படி இருந்தது மிஸ்டர் ஷர்மா? ஒன்றும் சிரமங்கள் ஏற்படவில்லையே?"

"வெரி நைஸ் யங்க் மேன்! இனிமையான பயணம்! இன்னும் சொல்லப் போனால் அந்த பெனிசுல்வேனியப் பல்கலைக் கழகத்தில் கழித்த 4 நாட்களுமே மிக அருமையாகக் கழிந்தன! நல்ல பல மனிதர்கள், ஆர்வம் மிக்க மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுடனான கலந்துரையாடல், விருந்து என்று ஒரே அமர்க்களமாக இருந்தது!"

இரவு நேரக் நெரிசலற்ற சாலையில் முப்பது நிமிடங்களில் ஹோட்டல் வளாகத்தில் கார் நுழைந்தது!

"ஓகே மிஸ்ட ஷர்மா! நன்கு ஓய்வெடுங்கள்! மீண்டும் நாளை மதியம் வந்து உங்களைத் தொடர்பு கொள்கிறேன்! குட் நைட்!"
"மிஸ் ஆனந்தி! நீங்களும் நன்கு ஓய்வெடுங்கள்! குட் நைட்" என்று விடைபெற்றான் நந்தா!

கார்பார்க்கிங்கை நெருங்கி நேரம் பார்க்கையில் மணி 2 ஆகிவிட்டிருந்தது!
கார் டாஷ் போர்டைத் திறந்து பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்ற வைத்தான்! பார்க்கிங் காவளாளியின் சம்பிரதாய சலாம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காரை வெளியே எடுத்தான்.

காரின் ஸ்டீரியோவை ஆன் செய்து தனக்கு பிடித்த மெலோடீச் கலெக்ஷனை ஓடவிட்டான்! ரம்யான அந்த மெலோடி பாடல்களுக்கு நடுவே சிறிது நேரமே சந்தித்த ஆனந்தி அவன் நினைவில் வந்து வந்து சென்றாள்.

ஸ்டீரியோவின் மெலோடியஸில் குழைந்த சன்னமான எஸ்.பி.பியின் குரலையும் தாண்டி அவன் காதுகளில் கணீரென்ற குரலில்

"சூடப்பா சந்திரனார் மூன்றேழ் ஐந்து
சுத்த இந்து பதினொன்றில் தனித்திருக்க
மாடப்பா மந்திரங்கள் செய்வான் காளை
மகத்தான வாதமொடு வைத்தியம் செய்வான்"

என்று ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகப் புரியும் வண்ணம் மெதுவாக நிதானமாக அழுத்தம் திருத்தமாக ஏதோ ஒரு செய்யுளை சொல்லிக் கொடுப்பது போல் அவனது செவிகளில் கேட்டது!

தொடரும்..................!

Thursday, February 12, 2009

மாதங்களில் அவள் மார்கழி - 16"என்னடா சொல்றே! நீ சொல்றது நிஜமா? அப்போ அந்த பொறம்போக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லையா?"


"ஆமாங்க தலைவரே! அந்தப் பையன் அவங்க ஊர்லயே ஒரு பொண்ணை விரும்பிகிட்டிருக்கான்! அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்! இப்போ அவங்க வீட்டிலயும் பச்சைக் கொடி காட்டிட்டாங்க!"


"ம்! என் தங்கச்சி விரும்பிட்டாங்கற ஒரே காரணத்துக்காகத்தான் அவன் மேல கை வெக்காம விட்டிருந்தேன்! எப்போ அவன் என் தங்கச்சியை விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு தெரிஞ்சிதோ, அவனை உயிரோட விட்டு வெக்க என் மனசு இடம் கொடுக்கலை! நம்ம முரளியை வந்து என்னை பார்க்கச் சொல்லு! அப்படியே அந்தப் பையனோட ஃபோட்டோ ஒண்ணு எனக்கு வேணும்!

.....................................................................................................................................................................

"அண்ணே! நான் காலேஜுக்கு கிளம்புறேன்"
அவசர அவசரமாக நந்தினி புறப்பட்டுக் கொண்டிருந்தாள்!

"அட! என்னம்மா இது! டிஃபன் கூட பண்ணாம! சாப்பிட்டுட்டுப் போம்மா! மஞ்சுளா நந்தினிக்கு டிஃபன் கூட எடுத்து வைக்காம என்ன பண்ணிகிட்டிருக்கே அங்கே?"

சமையலைறை நோக்கிக் குரல் கொடுத்தான் தென்னரசு!

"அண்ணே! ப்ளீஸ் காலேஜ் கேண்டீன்ல போயி பார்த்துக்கிறேன்! அண்ணி நிதானமா சமைச்சி உங்களுக்கு கொடுப்பாங்களாம்! நீங்க சமர்த்தா சாப்பிடுவீங்களாம்! நான் இப்போ காலேஜ்க்கு கெளம்புவேணாம், சரியா"

கொஞ்சலாகக் கேட்டாள்.

"சரி! பார்த்துப் போம்மா! நல்ல பொண்ணுடா!" தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டே வழியணுப்பி வைத்தான்.


சரியாக இரண்டு வருடங்கள் கழித்து..........................................................

தனது செல்ஃபோன் ஒலிக்க காதருகே கொண்டு சென்றான் சக்தி!

"என்ன! இப்பவா! ஹாஸ்பிடல் கொண்டு போயாச்சா! இதோ இப்பவே கிளம்பி வரேன்"..

திடுமென டென்ஷன் கூடிப்போனது! அவசர அவசரமாக தனது மேலாளரிடம் கூறி விட்டு அலுவலக வாசலில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை உயிர்ப்பித்தான்!

மருத்துவமனை ரிஷப்ஷனில் அறை எதுவென விசாரித்துக் கொண்டு உள்ளே சென்றான் சக்தி!

அவனது பெற்றோர்கள் மற்றும் சுகந்தியின் பெற்றோர்களும் சிறிதளவு பதட்டம் குறைந்து ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்தார்கள்! சக்தி உள்ளே வந்ததும் அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.

"என்னடா! ரொம்ப வலி எடுத்துடுச்சா!"
"ம். எங்க நீங்க வராம ஆஃபீஸ்லயே இருந்துடுவீங்களோன்னு கவலையாயிடுச்சு தெரியுமா! "

தலையைத் தடவி விட்டான்!

"நான் வராம இருப்பனா சுகந்தி! நீ என் உசிராச்சே! இப்போ என் இன்னொரு உயிரையும் சுமக்குறே! இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த உயிரையும் கைல கொடுக்கப் போறே! இந்த நேரத்துல கண்டிப்பா நான் உன் கூட இல்லாம எங்கடா போயிடுவேன்"

"என்னங்க! நமக்குப் பிறக்கப் போறது ஆணா பெண்ணா?"

"எதுவா இருந்தாலும் நமக்கு ஓகே சுகந்தி!"

"எனக்குப் பொண்ணுதான் பிறக்கணும்னு ஆசையா இருக்குங்க சக்தி!"

"அப்ப கண்டிப்பா பொண்ணுதான் பிறக்கும்! ஆமா பொண்ணு பிறந்தா என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சிருக்கே!"

"நான் என்ன பேர் வைக்கணும்னு சொல்வேன்னு தெரியாதா உங்களுக்கு!"

"இப்ப எனக்கு எதுவும் யோசிக்கத் தெரியலைடா! நீயே சொல்லிடேன்!"

மெதுவாக சக்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்! அவளது கண்கள் கொஞ்சம்போல கலங்கியது!

"நம்ம பொண்ணுக்கு நந்தினின்னு பேர் வைக்கணுங்க சக்தி!"

"ஹேய்! என்ன இது இப்பப் போயி கண் கலங்குறே!"

மனசுக்குள் அவனுக்கும் கொஞ்சம் பாரமானது! ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள வில்லை!

அதற்குள் அந்த அறைக்குள் வந்த நர்ஸ் இருவர் "சார்! நீங்க வெளியே போயி இருங்க! டைம் ஆச்சு! இவங்களை ஆபரேஷன் தியேட்டர்க்கு கூட்டிட்டுப் போகணும்" என்றார்கள்!

பழைய நினைவுகள் சக்தியின் மனதில் நிழலாடத் துவங்கின!

கல்லூரி கேண்டீனில்
"சக்தி! எப்படியோ உங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்க போல! கங்க்ராட்ஸ் சக்தி" என்றாள் நந்தினி!

"ஆமா நந்தினி! ஒரு வழியா சுகந்தியை அறிமுகப் படுத்தி வெச்சி பர்மிஷன் வாங்கிட்டேன்! அம்மாவுக்கு சுகந்தியை ரொம்பவே பிடிச்சிப் போச்சு!"

காபி கோப்பையை மேசையில் வைத்துவிட்டு கேண்டீனை விட்டு வெளியேறி வகுப்பை நோக்கி நடந்தனர்!

திடீரென யாரோ ஓடி வருவது போலத் தோன்ற சட்டெனத் திரும்பினாள் நந்தினி!

அதற்குள் ஓங்கிய அரிவாள் ஒன்று சக்தியின் பின்புறக் கழுத்தை நோக்கி வெகு வேகமாக நெருங்க.. சட்டென சக்தியின் விலாவைப் பிடித்து நந்தினி தள்ளிவிட்டாள்!

"சக்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ............"

சக்தி சுதாகரித்து திரும்புவதற்கு எடுத்துக் கொண்ட ஒரே விநாடி்ப் பொழுதில் நடந்து முடிந்திருந்தது!

"டேய்!...." ஓடிவருவதற்குள் வேட்டியும் கைலியுமாய் வந்திருந்த கும்பல் ஓரே ஓட்டமாக ஓடி விட்டிருந்தது!

"நந்தினி...நந்தினி...." அலறிக் கொண்டிருந்தான் சக்தி!

கழுத்தில் வெட்டுப் பட்ட நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக உயிரை இழந்து கொண்டிருந்தாள்!


"குவா...குவா.." என்ற குழந்தையின் அழுகுரல் சக்தியை நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது! ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்த டாக்டர் சண்முகவடிவு சக்தியை நெருங்கினார்.

"கங்க்ராஜுலேஷன்ஸ் சக்தி! சுகந்தி ஆசைப் பட்ட மாதிரியே பொண்ணுதான் பிறந்திருக்கா உங்களுக்கு! இன்னும் அரை அவர்லே சுகந்தி கண்னு முழிச்சிடுவாங்க நீங்க போயி பார்க்கலாம்.."

மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போயிருந்த சக்தி, சுகந்தி ஆகியோருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியே இருந்தன!

"சொன்ன மாதிரியே என் மருமவ பொண்ணைப் பெத்துக் குடுத்துட்டா! சக்தி!

என் பேத்திக்கு என்னடா பேரு வைக்கப் போறே!"

"நந்தினி" என்றான் சக்தி!

அருகிலிருந்த பெருமாள் கோவில் ஒலி பெருக்கியிலிருந்து சன்னமாக நாலாயிர திவ்யப் பிரபந்த வரிகள் கேட்டன.

"பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விருமபியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத் தேத்துவர் பல்லாண்டே"


-:முற்றும்:-

அனைத்துப் பகுதிகளின் தொகுப்பு