Tuesday, March 3, 2009

நாலாம்பிறை - திதி 2


முதல் பகுதி

"சுவாமி"

குரல் கேட்டு தியானத்திலிருந்து விடுபட்டுக் கண்விழித்தார் நித்தியானந்தர்! இடுப்பில் சுற்றியிருந்த காவி வஸ்திரமும் விபூதிப் பட்டைகள் அணிந்த திருமேனியுமாய் முகத்தில் நிறைந்திருந்த பேரமைதியும், மேனியை அலங்கரித்த ருத்திராட்ச மாலைகளும் சித்தர் என்னுமளவிற்கு உண்டான தேஜஸ் கொண்ட முகப் பொலிவும் கண்களுக்குள் குடிகொண்டிருந்த சாந்தமும் பார்த்தவுடன் கைகூப்பித் தொழச்செய்பவையான தோற்றம் அவருடையது!
எத்தனை வயதைக் கடந்திருப்பார் என்று எளிதில் கணக்கிட்டுவிட முடியாது!

தலையில் முடிந்த நரைத்த ஜடாமுடியை வைத்து வேண்டுமானால் எண்பதைக் கடந்திருப்பார் என்று கூற முடியும்!

எதிரே பணிவாய் நின்றிருந்த சுந்தரேசனை புன்முறுவலுடன் நோக்கினார்!
"என்ன சொல்ல வருகிறாய்" என்று அவரது பார்வை கேட்டது!

"சுவாமி! ஒரு சந்தேகம்!" என்றான் சுந்தரேசன்!
"கேள்"
"இப்படி விபரீத சிந்தனைகளுடன் தீய சக்திகள் செயலாற்ற முனைந்திருக்கும்போது அவற்றைத் தடுப்பது எப்படி? மனித இனத்திற்கு தீங்குகள் விளையும் அல்லவா? அவர்களிடமிருந்து அப்பாவி மக்களைக் காப்பது எப்படி சுவாமி"

"ஹெஹெ!" மந்தகாசப் புன்னகையுடன் சிறிது மௌனம் சாதித்தார்!

"சுந்தரேசா! எப்பொழுதெல்லாம் தெய்வ சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அற்ப மானிடர்கள் விபரீத விளைவுகளை ஏற்படுத்த எத்தனிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் இறைவன் தன்னால் அனுப்பப்பட்ட மானிடர்கள் மூலமே அவர்களைத் தடுத்து தண்டித்து பிறரைக் காக்கவும் செய்கிறான் என்பதை அறிந்ததில்லையா நீ"

"அது உண்மைதான் சுவாமி! ஆனால் நீங்கள் சொல்லிய இத்தகைய தீயவர்கள் சாதாரண மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டு மந்திர தந்திர சக்திகளால் தீங்கு விளைவிக்க இருக்கிறார்களே! இவர்களிடம் சாதாரண மானிடரால் எப்படி போரிட முடியும்? இறைவனே அல்லவா அவதரிக்க வேண்டும்"

"ம்! இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள் உண்டு! இவர்களை வெல்லுமளவிற்கு மந்திர தந்திர திறமைகளுடன் இனிமேலா இறைவன் படைக்கப் போகிறான்! ஏற்கனவே படைத்து விட்டிருக்கிறான் சுந்தரேசா!
அவன் விரைவில் இங்கே வரவேண்டும்! அவனது பணி இங்கிருந்தே தொடங்க வேண்டும் என்பது எழுதப் பட்டிருக்கிறது!"

"அம்மானுடன் இன்னும் தன்னை உணராத நிலையில் இருக்கிறான்! உணர்ந்தபின் அவனது பணி அவனுக்கு உணர்த்தப் படும்! அவனுக்கு அழைப்பு நேற்றே அனுப்பப்பட்டு விட்டது என்பதை அறியமாட்டாய் நீ"

"ஆஹா! அப்படியெனில் நிம்மதியாய் இருக்கிறது சுவாமி!"

"சுந்தரேசா! உலக உயிர்களுக்காக உன் மனம் கொள்ளும் கவலை எனக்கு ஒருபுறம் மகிழ்வை அளித்தாலும் உலக நிகழ்வுகள் உன்னை சஞ்சலத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் இன்னும் நீ பக்குவப் படாமால் இருக்கிறாயே என்று என் உள்ளம் துணுக்குறுகிறது"

"என் செய்வது சுவாமி! தீய சக்திகள் அழிவுப் பணிக்கான ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டன என்று நீங்கள் சொன்ன கணத்திலிருந்தே என் மனதில் கவலை குடி கொண்டு விட்டது! தவறெனில் மன்னியுங்கள் சுவாமி"

"ம்ஹூம்! இது உன் தவறல்ல சுந்தரேசா! இன்னும் சில காலம் ஆகும்! சஞ்சலங்களில் இருந்து உன்னை நீ விடுவித்துக் கொள்ள! சரி! நேரமாகிவிட்டது!
என்னுடன் வா! சில மூலிகைகள் தேட வேண்டிய வேலை இருக்கிறது!"
என்று கூறியவாறு எழுந்து குடிலின் வேலியைக் கடந்து அந்த காட்டுப் பகுதிக்குள் ஒற்றையடிப் பாதையில் நுழைந்தார் நித்தியானந்தர்! அவரைப் பின் தொடர்ந்து சென்ற சுந்தரேசன் சில அடிகள் கடந்து ஒரு பெரிய ஆலமரத்தைக் கடக்கும்போதுதான் நிமிர்ந்து பார்த்தான்..

மரத்தில் விழுதொன்றில் விநோதமான ஒரு துணிப்பையொன்று கட்டப் பட்டிருந்தது! தினமும் கடந்த போதெல்லாம் பார்த்ததில்லை! புதிதாக இருந்தது!

"சுந்தரேசா" நித்தியானந்தரின் குரல் கேட்டு மீண்டும் கவனத்தைப் பாதையில் செலுத்தி வேகமாக அவரைப் பின்தொடர்ந்தான்!


இவர்களின் பாதையில் எதிர்புறம் இருந்து விறகு பொறுக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்த பெண்கள் மூவர் தங்கள் தலையிலிருந்த விறகுச் சுமைகளைக் கீழே வைத்துவிட்டு

"கும்புடுறேன் சாமி" என்று அவர் காலில் விழுந்து வணங்க
"ம்ம்! நலமுடன் வாழ்க" என்று ஆசீர்வதித்து அவர்களுக்கு தன் மடியிலிருந்து விபூதியை எடுத்து வழங்கினார் நித்தியானந்தர்!

"என்னம்மா! காய்ந்த குச்சிகளைத்தானே பொறுக்கிக் கொண்டு போகிறீகள்? மரம் செடிகளில் கை வைப்பது இல்லையே" என்று சிரித்தவாறே கேட்டார்.

"ஐயயோ! அப்படியெல்லாம் செய்வமா சாமி! காஞ்ச குச்சிகளைத்தான் எடுக்குறோம்! நீங்க சொன்னமாதிரித்தான் நடந்தாத்தானே எங்க பொழப்பு பிரச்சினையில்லாம போகும்"
கொஞ்சம் வாயாடிப் பேசும் பெண்ணொருத்தி முன்வந்து பேசினாள்! மீதமிருவரும் மௌனமாக நின்றார்கள்!

"ம்ஹூம்! நல்லது! அங்கப்பன் மகள் செல்லாயி மௌனத்தில் ஏதோ மர்மர் இருப்பது போல் இருக்கிறதே" என்று நித்யானந்தர் மர்மப் புன்னகையுடன் கேட்க
விக்கித்து நிமிர்ந்தாள் செல்லாயி!

9 comments:

 1. Kalakala poaguthu thaLa...
  waiting for the next part.

  ReplyDelete
 2. thalai-marmathesam + endemuri veerendhranath + pallaya saami padam ...ellam mix panni oru remix padam parkara mathiri irukku...en viral nakangal gaali- (nailbiting story nu solren)...waiting for next...

  ReplyDelete
 3. இரண்டு பகுதிகளையும் இன்று தான் படித்தேன். கடைசியாக தொடரும் என போட மறந்துட்டிங்க போல... இந்த சாமியாருங்க எப்போதுமே சூட்சமமாதான் பேசுவாங்களா?

  ReplyDelete
 4. தொடரும்.. ..

  தொடர்கிறோம்..:)

  ReplyDelete
 5. சிபி.. நல்லா போயிட்டு இருக்கு... இண்டரஸ்டிங்.... "ஹெஹெ" சொல்லும் போது மட்டும் சாமியாரை தாண்டி..நீங்க தெரிஞ்சிங்க...???? !! :))

  அப்படி தெரியாமல் இருந்தால் நல்லா இருக்குமேன்னு எனக்கு தோனுது.. சரியான்னு தெரியல...

  அடுத்ததை எதிர்பார்த்து.... பெட்டர் ஐ சப்ஸ்கிரைப் திஸ்..டூ மை ஈமெயில்..!! அப்பத்தான் மிஸ் பண்ணமாட்ட்டேன்...:)

  ReplyDelete
 6. ம்ம்... அடுத்ததுக்கு ஓடிப் போயி பார்க்கிறேன்

  ReplyDelete