Wednesday, July 18, 2007

மாதங்களில் அவள் மார்கழி! - 1

"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; "

கோவில் ஒலிபெருக்கியில் கசிந்து கொண்டிருந்த திருப்பாவைப் பாடல், என்னை எழுப்பியது.
"அடச் சே! இவ்ளோ நேரம் ஆச்சே! நல்லாத் தூங்கிட்டேனோ"

அவசர அவசரமாய் போர்வையை உதறி எழுந்தேன். பிரஸ்ஸையும் பேஸ்டையும் கையிலெடுத்துக் கொண்டு டவலை எடுத்துத் தோளில் போடுக் கொண்டேன்.

இன்னிக்கு கோவிச்சிக்கப் போறா! எப்படி சமாளிக்கப் போறேனோ!

குளியல் முடித்து பேண்ட், சட்டை மாட்டி வேகமாக தெருவில் இறங்கினேன்.
"அம்மா! கதவைத் தாழ் போட்டுக்குங்க" உட்புறம் நோக்கிச் சொல்லிவிட்டு நடக்கத் துவங்கினேன்.

சில்லென்ற மார்கழிக் காற்று முகத்தில் அறைந்தது. இந்த மார்கழிப் பனியும், சில்லென்ன காற்றும் அனுபவித்து உணர வேண்டியது. சொல்லி உணர வைக்க முடியாது. அதுவும் விடிந்தும் விடியாத இந்த மார்கழியின் அதிகாலைப் பொழுது இருக்கிறதே! ஆஹா! சுகமோ சுகம்! வருடம்தோறும் மார்கழியாய் இருந்தால் என்ன?

கோயில் சென்று சேரும்போது கோவில் ஒலிபெருக்கி

"பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே"
என்று பாடிக் கொண்டிருந்தது.

இதைப் பாடிக்கொண்டிருக்கும் குரல்களில் அவள் குரலும் உண்டு!

பாம்பணையில் பள்ளி கொண்டவனைப் படிகளேறித் தரிசிக்க வேண்டும். வேக வேகமாய் படிகளில் பறந்தேன். அந்தக் குளிரிலும் நெற்றியில் சிறிது வேர்த்தது.

பஜனைக் குழுவை நெருங்கியதும் பாடலைப் பாடிக் கொண்டே சிலர் நிமிர்ந்தனர்.
அனைவருக்கும் பொதுவாய் ஒரு வணக்கம் போட்டுவிட்டு, இன்னும் திறக்காத பரந்தாமனின் கதவுகளை நோக்கியும் ஒரு கும்பிடு போடு விட்டு ஆண்கள் பகுதியில் சென்று அமர்ந்தேன்.

அடுத்த பாடல் ஆரம்பித்தது. எனது குரலும் குழுவினரோடு இணைந்தது.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து
உன்பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

பாடலை உதடுகள் முணுமுணுத்தவாறே கண்கள் தேட ஆரம்பித்தன!

அதோ அழகிய சிற்ப வேலைப் பாடுகளோடு கூடிய அந்தத் தூணுக்கு அருகே,
ஊதா நிறத் தாவணியும், சற்று ஈரம் காயாத கேசத்தில் முடிந்தௌ வந்த மல்லிகைச் சரமுமாய்..

அட! அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். பாடலைப் பாடியவாறே ஒரு புன்னகை! யாரும் அறியா வண்ணம்! நானும் புன்னகைத்தேன்!

தொடரும்...........................................!

பகுதி 2

3 comments:

  1. 2007 சூலைலே ஆரம்பித்த கதை 2009 பிரவரி வரை போகுதா - பலே பலே !

    ReplyDelete
  2. கண்கள் பார்க்க - இதழ்கள் புன்னகைக்க - காதல் கதை தொடங்குகிறதா ....... நல்லாருக்கு

    ReplyDelete
  3. அடிக்கிற வெயிலுக்கு மார்கழிக் குளிர் இதம்.

    ReplyDelete