Tuesday, August 14, 2007

மாதங்களில் அவள் மார்கழி! - 6

பகுதி 5

எப்படியோ கவுன்ஸிலிங், அட்மிஷன், ஹாஸ்டல் எல்லாம் முடிந்து இன்றுதான் முதல் நாள் வகுப்பு.
முதன் முதலாக ஒரு கல்லூரி வாழ்க்கை. ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில். அதுவும் சென்னை.

லேடரல் எண்ட்ரிதான்(நேரடியாக இரண்டாம் ஆண்டு). இருந்தாலும் முதல் நாள் வகுப்பில் கொஞ்டம் மிரட்சியாகத்தான் இருந்தது.

தாவணியிலும், சுடிதாரிலும் பார்த்த பெண்களை இங்கே வித விதமான உடைகளில் காண முடிந்தது.
மாணவர்களிடமும் ஒரு மாதிரி எதைப் பற்றியும் கவலை கொள்ளாதது போலவே சிகையும், ஒரு அசால்ட்டான பாவனையும் மிகுந்திருந்தது. ஆனாலும் ஒரு வித தெளிவு இருந்தது அவர்களிடம்.

வகுப்பிற்குள் நுழைந்ததும் மூன்றாவது வரிசையில் ஒரு இருக்கை காலி இருந்தது.

"இங்கே யாராச்சும் வறாங்களா?" தயக்கத்துடன் கேட்டேன்.

"நோப், யூ கேன் ஜஸ்ட் சீட் ஹியர், எனிவே ஆர் யூ லேட்டரல் எண்ட்ரி?"

"ஆமாம்"

"ஐயாம் ராஜ்" என்று கை நீட்டினான்.

"ஹாய், ஐ யாம் சக்தி" என்றேன்.

மணி 9.15 ஆகியிருந்தது. ஆசிரியர் வரும் நேரம்தான். வகுப்பிற்குள் சல சலவென சத்தம் எழுந்து கொண்டே இருந்தது.

"நம்ம பாலிடெக்னிக்கில்லெல்லாம் இந்நேரத்திற்கு எந்த சத்தமும் இருக்காதே, ஆசிரியர் வராவிட்டாலும் கூட" நினைத்துக் கொண்டேன்.

"மச்சி, இன்னிகு ஃபர்ஸ்ட் அவர் நம்ம தருமி கிளாஸ்டா!" என்று சொல்லிக் கொண்டே ஒரு மாணவன் எங்களைக் கடந்து சென்றான்.

"அது என்ன தருமி! பேர் வித்தியாசமா இருக்கே?" என்றேன்.

"ஹிஹி.. அதுவா அவரோட உண்மையான பேர் புரொபெசர் சாம். பசங்களை எப்போ பாரு கேள்வி கேட்டுகிட்டு இருப்பாரு. அதனால சீனியர் பசங்க அவருக்கு வெச்ச பேரு தருமி. அவருக்குக் கேள்வி கேக்க மட்டும்தான் தெரியுமாம்" என்றான் ராஜ்!

அதற்குள் புரபொஸர் வகுப்பிற்குள் நுழைந்தார். புதிய மாணவர்களின் பெயர்களை கேட்டு அறிமுகப் படுத்திக் கொண்டு வகுப்பைத் தொடங்கினார்.

"ம். ஏறத்தாழ இன்னும் ரெண்டு மாசத்துல செமஸ்டர் எக்ஸாம் வரப் போகுது. உங்கள்ள யாராருக்கெல்லாம் கோல்டு மெடல் வாங்குற எண்ணம் இருக்கு?" அனைவரையும் பார்த்துக் கேட்டார் சாம்.

"ஆரம்பிச்சிட்டாருடா" என்று ராஜ் சலித்துக் கொண்ட அதே நேரம் எனது வலது விலாப் பகுதியில் சுரீரென்ற வலியை உணர்ந்த நான் சட்டென முழங்கைய்யை உயர்த்தி குனிந்து பார்த்தேன்.

"வெரி குட்! இப்படிப்பட்ட ஸ்டூடண்ட்ஸைத்தான் நான் எதிர்பார்த்தேன். தம்பி யாருப்பா அது? எழுந்திருப்பா! உன் பேரென்ன?" என்று கேட்டுக் கொண்டிருந்தார் பேராசிரியர் சாம்.

மீண்டும் வகுப்பைக் கவனிக்க நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது. என்னை நோக்கித்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது. பின்புற இருக்கையிலிருந்து மெல்லிய சிரிப்பொலி கேட்டது.


"சார் அதுவந்து..! நான் அதுக்காக கை தூக்கலை சார்!" என்று தயங்கித் தயங்கிச் சொன்னது அவர் காதுகளில் விழவே இல்லை. எழுந்து வேறு நின்றாயிற்று.

"குட்! அப்படித்தான் இருக்கணும்! உன் பேர் என்ன?" மீண்டும் கேட்டார்.

"சக்தி"

மீண்டும் விளக்கம் சொல்ல நினைத்தால் தொண்டையிலிருந்து வெறும் காற்று மட்டுமே வந்தது.

"லேட்டரல் எண்ட்ரிதான? டிப்ளமோல எவ்வளவு பெர்சண்டேஜ்?"

"97"

"குட்! அப்போ நீ காம்படீட் பண்ணலாம்! நீ கோல்டு மெடல் வாங்குவே! ஐ பிலீவ் இட்!" என்றார் ஒரு புன்னகையுடன்.

"என்னடா இது வம்பாப் போச்சே! பின்னாடி இருந்து எவனோ இடுப்புல குத்தி விட்டுட்டான்னு கை தூக்குனா இவரு இப்படி நினைச்சிகிட்டாறே! நினைச்சிக்கிட்டுமே! இப்ப என்ன ஆயிடுச்சு!" என்று எண்ணிக் கொண்டே அமைதியாக நின்றேன்.

"மச்சி! நந்தினி சரியா டென்ஷன் ஆயிட்டாடா! பாரேன் கோல்டு மெடல் போட்டிக்கு ஒருத்தன் போட்டிக்கு வந்துட்டான்னதும் கோவமா நகம் கடிக்குறதை!" என்ற பின்புற இருக்கையின் கிசுகிசுப்புக் குரல் கேட்டு அப்படியே வலது புறம் திரும்பினேன்.

தன் பெரு விரல் நகத்தைக் கடித்தவாறே கோபமுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.

"அவள்தான் நந்தினியோ?"

"சபாஷ் சரியான போட்டி" மீண்டும் பின்புற இருக்கையிலிருந்து சற்று பலமாகவே வந்த குரல் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது.

தொடரும்....................................!

No comments:

Post a Comment