Saturday, March 1, 2008

மாதங்களில் அவள் மார்கழி-13

பகுதி - 12

கண்விழித்துப் பார்த்த சக்தி இன்னமும் சுகந்தி தன் தலையணை அருகில் அழுதவாறே அமர்ந்திருப்பதைக் கண்டான்!

"என்ன சுகந்தி! இன்னமும் நீ அழுகையை நிறுத்தலையா? எனக்குத்தான் ஒண்ணும் ஆகலையே! இன்னும் ரெண்டு நாளில் எல்லாம் சரியாப் போயிடும்னு டாக்டர்தான் சொல்றாருல்ல!"

"உனக்கென்ன நீ பாட்டுக்கு சொல்லிடுவே! உன் வலி என்னென்னன்னு எனக்குன்னுத்தான தெரியும்?" தேம்பியவாறே வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வந்தன!

"அட! இதைப் பார்ரா! இங்க பாருடா! பெரிசா வலியெல்லாம் இல்லை எனக்கு! சின்னச் சின்ன காயங்கள்தான் எல்லாமே! அதனாலதான் அன்னிக்கே டிஸ்சார்ஜ் பண்ணி ஊருக்குப் போகலாம்னு அனுப்பினாங்க! இல்லாட்டி அனுமதிப்பாங்களா என்ன?"

"ஆமாடா! உனக்கு ஒண்ணுமே இல்லைதான்! இங்கே நாங்கதான் என்னமோ ஏதோன்னு பதறிகிட்டு இருக்கோம்! போடா இவனே! பெத்து வளர்த்து படிச்சிட்டு வரட்டும்னு மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சா எவனெவனோ வந்து உன்னை அடிச்சிப் போட்டுட்டுப் போறான்! நாங்க ஒண்ணும் இல்லைன்னு நிம்மதியா இருப்பமா?"

என்றவாறே அறைக்குள் நுழைந்தார் சக்தியின் அம்மா!

சட்டெனத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் சுகந்தி!

"பாரும்மா! உன் ஃபிரண்டை! எப்படி அடிச்சிருக்காணுங்கன்னு! இதுக்காகவா நாங்க அவனை அனுப்பி வெச்சோம்! "

சட்டேன அவரது கண்களும் கலங்கியது!

"அம்மா! என்ன இது! இங்கயெல்லாம் கண் கலங்கிகிட்டு! நான் நல்லா ஆகிட்டேன்மா! ஒண்ணும் இல்லை! நீங்கதான் ஓவரா கற்பனை பண்ணிகிட்டீங்க!"

"அம்மா சுகந்திக்கு ஒரு காஃபி போட்டுக் கொடேன்! வந்து ரொம்ப நேரம் ஆகுது!" என்றான் சக்தி!

"இரும்மா காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்று எழுந்தவளை

"நீங்க உக்காருங்கம்மா உங்களுக்கும் சேர்த்து நான் போட்டு எடுத்துட்டு வரேன்" என்று சமயலறை நோக்கிச் சென்றாள் சுகந்தி.

"அம்மா பார்த்தியா! உன் மருமகளை! இப்பவே உனக்கு வேலை வெக்கக் கூடாதுன்னு பார்க்குறா" என்றான் சிரித்துக் கொண்டே!

"ஆமாடா! நல்ல பொண்ணாத்தான் தெரியுறா! கண்ணுக்கு லட்சணமா மஹாலட்சுமியாட்டம் இருக்கா! உனக்கு ஒண்ணுன்னா துடிச்சிப் போயிடுறா! அன்னிக்கு உனக்கு அடி பட்டுடுச்சுன்னு தகவல் வந்ததும் ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா! ம்ஹூம்! எல்லாம் சரி! ஆனா உங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சா என்ன ஆகுமோன்னுதான் பக்கு பக்குன்னு இருக்குதுடா சக்தி"

அதற்குள் சுகந்தி வரும் சத்தம் கேட்டதும் இந்த்ப் பேச்சை அப்படியே நிறுத்திக் கொண்டாள் மங்களம்.

"என்ன! அம்மாவும் புள்ளையும் எதைப் பத்தி கவலைப் படுறீங்க?"

காபி டம்ப்ளரை எடுத்து மங்களத்திடம் நீட்டியவாறே கேட்டாள் சுகந்தி!

"எல்லாம் இவன் கல்யாண விஷயம்தாம்மா! இன்னும் ரெண்டு வருஷத்துல இவன் படிப்பை முடிச்சதும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிட்டா அக்கடான்னு நாங்க இருப்போம் இல்லை!"

டக்கென்று வெருண்ட அவள் சக்தியை நோக்கினாள். அவன் கண்களைச் சிமிட்டி புன்னகைத்தான்!

"அம்மா! அவளை ஏன் பயமுறுத்துறே! சுகந்தி அம்மா சும்மா உன்னைச் சீண்டுறாங்க! நான் சுகந்திதான் உன் மருமகன்னு சொல்லிட்டேன்"

கையிலிருந்த காஃபி டம்ப்ளரை மேசை மீது வைத்துவிட்டு சட்டென குனிந்து மங்களத்தின் பாதங்களை தொட்டு வணங்கினாள்!

அதற்கு மேல் மங்களத்திற்கும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை!

"நல்லா இரும்மா! இனிமே இவன் உன் பொறுப்பு!" என்று அவளது தோளைத் தொட்டு எழுப்பி நிறுத்தி அவளது நெற்றியில் முத்தமிட்டாள்!

"சரிம்மா நேரமாச்சு நான் கிளம்புறேன்! சக்தி வரேன்" என்று கூறிவிட்டு உற்சாகமாகக் கிளம்பினாள் சுகந்தி!

தொடரும்................!

No comments:

Post a Comment